பக்கம் எண் :

பக்கம் எண் :148

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை

செவ்வனம் உரைக்கும்-தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து-இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சிமீமிசை-மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் - பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் - அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத்துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு-அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை - குற்றமற்ற தோற்றத் தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின்காவல் பூண்டேன் - இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை
என் பெயர் - எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ;

ஓங்குயர், மீமிசை என்பன ஒரு பொருட் பன்மொழிகள். சமந்தம் சமனொளி யெனவும் வழங்குமென்பது, "இலங்கா தீவத்துச் சமனொளி யென்னுஞ் சிலம்பினை யெய்தி" (28 : 107-8) என்று பின் வருவதனா லறியப்படும். சமந்தம் என்பதும், சமனொளி என்பதும் இலங்கையிலுள்ள ''ஆடம்ஸ் பீக்'' என ஆங்கில மொழியில் வழங்கும் மலையையே குறிக்குமென்று கருதுவர். அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; 1"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க.

29--35. இது கேள் - இதனைக் கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த-தரும வேந்தனாகிய புத்தன் தலைமையாகக் கூறிய, பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர்-பெருமை மிக்க நல்லறத்தில் வழுவாத நோன்புடையாரே, கண்டு கைதொழுவோர்-இப் பீடிகையைக் கண்டு கைகூப்பி வணங்குதற் குரியோராவர் கண்டதற் பின்னர்-அவ்வாறு இப் பீடிகையைக் கண்டபின்னர் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி-பைந்தொடியே அவர் முற்பிறப்பை அறிந்தோராவர். அரியர் உலகத்து- அத்தன்மையர் உலகத்திற் பெறுதற்கரியர், ஆங்கவர்க்கு அற மொழி உரியது உலகத்து ஒருதலையாக - அவர்கட்கு உறுதியாக உலகிலே தருமபதம் உரியது ;


1 குறள். 10.