பக்கம் எண் :

பக்கம் எண் :153

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை
 

என்றிங்ஙனம் விளியடுத்த பெயர்களை ஒருசேரக் கூறி, அவற்றினிறுதியில் ''நின்னடி'' என்று கூறுதல் அமையும். மாரன் - அறத்திற்கு மாறாய தீயவிருப்பங்களை மனத்தில் உண்டாக்கும் ஒரு தேவன் ; மாபோதியின்கீழ் தவஞ்செய்திருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் புத்தன் வென்று மேம்பட்டு விளங்கினன் என்பர். முயலுத லாவது அறத்தினை அறிவுறுத்தல்; பிறர் பொருட்டு அறத்தினை முயன்று செய்யும் என்றுமாம். அழிவற்ற நிருவாணமே (முத்தியே) அவனால் விரும்பப்பட்டமையின் அழியு மியல்புடைய துறக்கம் வேண்டப்படாதாயிற்று. பிறக்கு-பின்; 1"துறைபிறக் கொழியப் போகி" என்பது காண்க. கண்-ஈண்டு ஞானம்; புத்தன் எடுத்த பல பிறப்புக்களுள் ஒன்றில் வந்து இரந்த இந்திரற்குக் கண்ணைக் கொடுத்ததனை இதற்குப் பொருளாகக் கொள்ளுதல் சிறப்பின்று. தீமொழி-பொய், குறளை, வன்சொல், பயனில்சொல் என்பன. நரகர் சிலரது துன்பந் தணித்தற் பொருட்டுப் புத்தன் ஒரு பிறப்பில் நரகலோகத்திற்குச் சென்றான் என்பர். 2"அருவினை சிலர் கெட வொரு பெரு நரகிடை, எரிசுடர் மரைமல ரெனவிடு மடியினை" என்பது காண்க. கருடனுக்கு அருளறம் போதித்து நாகர் துயரினைப் போக்கினா னென்பதும் வீரசோழியத்து அச் செய்யுளுரை மேற்கோள்களால் அறியப்படும்.

73--5.   போதிநீழல் பொருந்தித் தோன்றும்-அரசமரத்தின் நீழலில் அமர்ந்து விளங்கும், நாதன் பாதம் நவை கெட ஏத்தி-புத்தன் அடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்து, தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்-மணிமேகலைக்குத் தீவதிலகை மொழியும்;

புத்தனை நாதன் எனப் பின்னரும் வழங்குவர்.

76--81.   குடிப்பிறப்பு அழிக்கும்-தன்னாற் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம்கொல்லும்-சிறப்பினை அழிக்கும், பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்-பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும், நாண் அணி களையும்-நாணாகிய அணிகலனைப் போக்கும், மாண் எழில் சிதைக்கும்-மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்-பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி-பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி, அது தீர்த்தோர்-அத்தகைய பசியை நீக்கினோரது, இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது-புகழை அளந்துரைத்தற்கு எனது
நா எழாது ;

குடிப் பிறந்தார்க் கேலாத இழிசெயல்களை உளவாக்கலின் அதனை அழிக்கும் என்றாள். பிடித்த-பற்றுக் கோடாகக் கொண்ட. விடூஉம்-விடுவிக்கும் : பிறவினை ; கல்வியும் அழியும் என்றபடி ; அவரது சொல்


1 பெரும்பாண், 351.  2 வீர. யாப்பு. 11. மேற்கோள்.