பக்கம் எண் :

பக்கம் எண் :154

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை
 

செல்லா தென்றவாறுமாம் ; 1"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார், சொற்பொருள் சோர்வு படும்" என்பது காண்க. அழகு செய்தலின் நாண் அணியெனப்பட்டது ;2 "அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு" என்றார் வள்ளுவனாரும். ஆணெழில் எனப் பிரித்தலுமாம்; 3 "பிறந்த குலமாயும் பேராண்மை மாயும், சிறந்த தங் கல்வியு மாயும்" என்பது அறியற்பாலது. பண்பிற்குப் பண்பு இல்லையேனும் தன்னாற் பற்றப்பட்டாருடைய நலங்களை யெல்லாம் அழித்தற் கொடுமைபற்றி, வேறு பண்புள்ளதுபோல் பசியைப் பாவி யென்றார்; 4 "இன்மை யெனவொரு பாவி" என்பதுங் காண்க. நிமிராது-எழாது; பேச முயலாது; புகழ் அளவுபடா தென்றபடி.

82--91.புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி-புல்லும் மரமும் கரியுமாறு புகையையுடைய அழல்போலும் வெப்பம் மிகுந்து, மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்-நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால், அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்-அரசுபுரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளை யுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திர முனிவன், இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்-பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்றுகின்றவன், அரும்பசி களைய ஆற்றுவது காணான்-அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாதவனாய், திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்-சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன், இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்-உண்ணுமுன் செய்தற்குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர், வந்து தோன்றியவானவர் பெருந்தகை -வந்து வெளிப்பட்ட அமரர் தலைவன், மழைவளம் தருதலின்-மழைவளத்தை அளித்தலான், மன்னுயிர் ஓங்கி-நிலைபெற்ற உயிர்கள் மிகுந்து, பிழையா விளையுளும் பெருகியது அன்றோ - தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ;

புறவயிரமுடையன புல் எனவும், அகவயிர முடையன மரமெனவும் படுமென்பது தொல்காப்பியத்து மரபியலானறியப்படும்; புல் - அறுகு முதலியனவுமாம். விசுவாமித்திரன் அரசர் மரபிற் பிறந்து புவியை ஆண்டுவருங்கால் வசிட்டருடன் முரணி அவரது தவ ஆற்றலையறிந்து, தானும் அருந்தவம்புரிந்து முனிவனாயினன் என்பது வரலாறு. அவன் பசிக்கொடுமையால் நாயூன் தின்ன முயன்ற செய்தி மனு நூலின் பத்தாம் அத்தியாயத்தினும் கூறப்பட்டுளது. இந்திர சிறப்பு- உண்ணுமுன் செய்யும் பலியீடு; இதனை ''வைச்சுவதேவம்'' என்பர்; பிற தேவர்கட்கும் உரிய தெனினும் தலைமைபற்றி ''இந்திர சிறப்பு'' எனப்பட்டது. இது பசியின் கொடுமைக்கு ஒரு வரலாறு காட்டியபடி.


1 குறள். 1049. 2 குறள். 1014. 3 நாலடி. 285. 4 குறள். 1042.