பக்கம் எண் :

பக்கம் எண் :155

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை
 

92--8. ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்-பொறுக்கும் வன்மையுடை யோராகிய செல்வர்க்கு அளிக்கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோ ரேயாவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை-வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் - அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி-உயிரினை அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்-கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை உரைத்தலும் ;

ஆற்றுநர்க்கு-கைம்மாறு செய்யும் வலியுடையோர்க்கு என்றுமாம். அறவிலை பகர்வோர் - அறமென்னும் பெயரால் வாணிகஞ் செய்வோர் என்றுமாம் ; பயன் கருதிச் செய்வோராகின்றமையின் "அறவிலை பகர்வோர்" என்றாள். 1 "இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" 2"ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம் வரையா, தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" என்பன ஈண்டு அறியற் பாலன. வாழ்வோர்க்கெல்லாம்- வாழ்வோ ரெல்லாருள்ளும் என்க : வேற்றுமை மயக்கம். 3"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப் புறப்பாட்டில் வந்துள்ளமையும் காண்க. கயக்கு - கயங்குதல் ; கலங்குதல்; "கயக்கறுமாக்கள்" (16 : 85) என்பர் பின்னும்.

99--106. விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்-போன பிறவியில் என்னால் விரும்பப்பட்ட கணவன், திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்கினவிடத்து, உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து - தீயிற் குளித்து உயிருடன் வேகாநிற்கும் யான் உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய - வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில் விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக்குற்றேன்-சாது சக்கரனை யான் உண்பித்த பொழுதைப் போல்வதாகிய ஒரு கனாவாகிய மயக்கத்தை யடைந்தேன், ஆங்கதன் பயனே - அக் கனாப்போலும் நினைவின் பயனே, ஆருயிர் மருந்தாய் ஈங்கு இப்பாத்திரம் என் கைப்புகுந்தது - அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகி இப் பாத்திரம் ஈண்டு என் கையிற்புக்கது ;


1 புறம். 134. 2 நாலடி. 98. 3 புறம். 18.