|
சொல்லும், அறங்கடையால் என
மூன்றனுருபும் விரித்துரைக்க. சுரை-உட்டுளை ; ஈண்டுப் பாத்திரத்தின் குழிந்த
உள்ளிடம்.
119--23.மறந்தேன் அதன் திறம் நீ எடுத்துரைத்தனை-யான்
அதன் இயல் பினை நன்கு மறந்தேன் நீ எடுத்துக் கூறினாய், அறம் கரியாக அருள்
சுரந்து ஊட்டும் - அறமே சான்றாக அருட்பெருக்கால் உண்பிக்கும், சிறந்தோர்க்கு
அல்லது செவ்வனம் சுரவாது-சிறப்புடையோர்கட்கு அன்றி ஏனையோர்க்குச் செவ்வனே
சுரவாது, ஆங்ஙனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை-அறம் கரியாக அருள் சுரந்தூட்டும்
அத்தன்மையையுடையை யாயினை அங்ஙனம் ஊட்டுவதின் பயனையும் அறிந்தாய் ஆதலின்,
ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப-ஈண்டு நின்று நின் பதிக்கு எழுவாயாக
என்று தீவதிலகை மொழிய ;
அறம் கரியாக என்றது பிறரறியச் செய்தல்
வேண்டா என்றபடி. அரு ளாவது ஒன்றின் துயர் கண்டவழி வேறு காரணமின்றித் தோன்றும்
இரக்கம். ''அவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்'' என முன்பு கூறியதனால்
''ஆங்ஙனமாயினை'' என்றாள்.
124--31.தீவதிலகை
தன் அடி வணங்கி-தீவதிலகையினுடைய அடிகளைப் பணிந்து, மாபெரும் பாத்திரம்
மலர்க்கையின் ஏந்தி - பெருமை மிக்க அமுதசுரபியை மலர்போலும் கையில் ஏந்தி,
கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு-புத்தன் திருவடிப் பீடத்தை வலங்கொண்டு
வணக்கஞ்செய்து, வானூடு எழுந்து மணிமேகலைதான் - மணிமேகலை விசும்பின் வழியாக
எழுந்து, வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த - வழுவுதலற்ற மணிமேகலா தெய்வம்
உறுதியாகக் கூறிய, எழுநாள் வந்தது என் மகள் வாராள் - ஏழாம் நாள் வந்தது
என் மகள் வரவில்லை, வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் - தப்புதலும்
உண்டு போலும் என்று கலங்குகின்ற மாதவியின்முன், வந்து தோன்றி அவர் மயக்கம்
களைந்து-வந்து தோன்றி அவர்களுடைய கலக்கத்தை நீக்கி ;
மயங்குவோள் - சுதமதியுமாம். இருவரும்
அகப்பட ''அவர்'' என்றார். மணிமேகலை தான் வந்து தோன்றி யென்க.
132--37.அந்தில்
அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் - அவ்விடத்தில் அவர்கட்கு ஓர் அற்புதத்தைக்
கூறுவாள், இரவிவன்மன் ஒரு பெருமகளே - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே,
துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைச் சேனைகளை யுடைய துச்சயனுடைய மனைவியே,
அமுதபதி வயிற்று அரிதில் தோன்றி- அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப்
பிறந்து, தவ்வையா ஆகிய தாரையும் வீரையும்-எனக்குத் தமக்கையராகிய தாரையும்
|