[சென்ற
மணிமேகலை அறவண வடிகள் இருக்குமிடத்தையடைந்து, அவர் திருவடியை மும்முறை வணங்கிப்
பரவி, தான் உவவனஞ் சென்றதும், உதயகுமரன் ஆங்குவந்து கூறியதும், மணிமேகலா
தெய்வம் தன்னை மணிபல்லவத்திற் கொண்டுபோய் வைத்ததும், அத் தீவிலே புத்து பீடிகையால் தன் பழம் பிறப்பினை அறிந்ததும் ''முற்பிறப்பிற் கணவனாயிருந்த
இராகுலனே உதயகுமரனாக வந்து பிறந்தான் ; அப் பிறப்பில் உனக்கு தமக்கையராக
விருந்த தாரையும் வீரையுமே மாதவியும் சுதமதியுமாகத் தோன்றினர்; அவர்கள்
வரலாற்றை அறவணவடிகள்பால் அறிந்துகொள்வாய் ; என்று மணிமேகலா தெய்வம்
கூறி, மூன்று மந்திரங்களை அறிவுறுத்துச் சென்றதும், பின்பு தீவதிலகை வந்ததும்,
அவளுடன் சென்று கோமுகியில் அமுதசுரபியைப் பெற்றதும், ''நின்னூரில் அறவணவடிகள்பால்
ஆபுத்திரன் வரலாற்றைக் கேள்'' என்று அவள் கூறத் தான் போந்ததும் ஆகிய
இவற்றையெல்லாம் தெரிவிக்க, அவர் கேட்டு மகிழ்ந்து, முற்பிறப்பிலே துச்சயராசன்
மனைவியராயிருந்த தாரையும் வீரையும் இறந்து முறையே மாதவியும் சுதமதியுமான
வரலாற்றை அவர்கட்குரைத்து, பின்னும் மணிமேகலையை நோக்கி, ''இவ்வுலகிலே
புத்ததேவனருளிய அறங்கள் குறைய மறங்கள் மிகுந்தன ; சலாகை நுழைந்த மணித்துளையினுள்ளே
கடல் நீர் ஓடாதாயினும் அத் துளை வழியே உகும் சிறிதாய நீர்போல் மக்கள்
செவியில் அறம் சிறிது சிறிது புகுதலுமுண்டென்று கருதி நான் அறஞ் சொல்லுதலுடையேன்,
சக்கரவாளத்திலுள்ள தேவர்களுடைய வேண்டுகோளால் ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம்
ஆண்டில் துடிதலோகத்திலுள்ள தேவன் இவ்வுலகிலே தோற்றஞ் செய்வன். பின்பு,
யாவர்க்கும் அருளறத்தில் மனஞ் செல்லும் எனவும், புத்தர் தோன்றும் காலத்தில்
ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவும், உயிர்களும் இன்னின்னவாறு நலமுடன்
திகழுமெனவும் கூறி, "இந் நகரிலே உன்னாற்சில நலங்கள் நிகழ்வனவாம்; அவை
நிகழ்ந்த பின்பன்றி யான் கூறும் அறவுரை நின் மனத்திற் பொருந்தாது ; இவ்
விருவரும் முற்பிறப்பிற் பாதபங்கய மலையை வழிபட்டனராதலின பின்னர் உன்னுடன்
கூடிப் புத்தர் திருவடியை வணங்கி வினையினீங்கி வீட்டுநெறிச செல்வர்; ஆருயிர்
மருந்தாகி அமுதசுரபியை நீ பெற்றனை ;
"மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்,
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறஞ் சாற்றினர்"