உரை
1--6.ஆங்கவர்
தம்முடன் அறவணவடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் - மணிமேகலை மாதவியுடனும்
சுதமதியுடனும் கூடி அறவணவடிகள் எவ்விடத்திலிருக்கின்றார் என்று வினாவிக்
கொண்டு, நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி-நரைமுதிர்ந்த
உடலையும் நா நடுங்காத மொழிகளையுமுடைய முதியோராகிய அறவணவடிகள் உறைவிடத்தை
அடைந்து, மைம்மலர்க் குழலி - மலர்களுடன் கூடிய முகில் போலுங் கூந்தலையுடைய மணிமேகலை, மாதவன் திருந்தடி - அறவண முனிவரது திருந்திய திருவடிகளை, மும்முறை
வணங்கி முறையுளி ஏத்தி - மூன்று தரம் பணிந்து முறைப்படி துதித்து ;
நா நடுங்கா உரையின் என மாறுக. நடுங்காத நாவினையும்
முதிர்ந்த உரையினையும் உடையான் எனலுமாம்; நடுங்கா நா - வழுவற்றசொல்;
|