பக்கம் எண் :

பக்கம் எண் :166

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை

மயக்கத்தால் தன்னைப் பாதுகாவாது சென்ற வீரை இறந்ததுவும், ஆங்கது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் - அவள் இறந்த செய்தி கேட்டு அத் துன்பத்தைத் தாங்காமல் தாரை ஒரு நிலா முற்றத்தில் ஏறி வீழ்ந்து இறப்பினை யடைந்ததுவும் ஆகிய, கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப - மிகப் பெருந் துயரத்தை அம் மன்னவன் மொழிய, பழவினைப் பயன் நீ பரியல்என்று எழுந்தேன் - இது முற்செய்த வினையின் பயனாம் நீ வருந்தாதே என வுரைத்து அங்கு நின்றும் எழுந்தேன், ஆடும்கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீரோ என - அங்ஙனமாகிய நீவிர் நாடக வரங்கில் நடிக்கும் கூத்தியர் கொள்ளுங்கோலம் போல ஈண்டு வேறு வகையான கோலத்துடன் வந்தீரோ என்று, மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் - துணியப்பட்ட பொருளினையுடைய பெருந்தவன் மணிமேகலையின் முன்னர் மாதவி சுதமதிகளின் வரலாற்றினைக் கூறியும் அமையாதவனாய் ;

வீரை மயக்கத்தால் போற்றாது சென்று மாய்ந்ததும், தாரை ஏறி வீழ்ந்து சாவுற்றதும் என்க. ஆகிய துன்பம் என ஒரு சொல் விரித்துரைக்க. கூத்த ரென்பதும் பாடம் ; 1''''ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது'''' என்பது ஈண்டு அறியற்பாலது. வந்தீரோ என்றது மாதவியையும் சுதமதியையும் நோக்கி. துணிபொருள் மாதவன் - மெய்ப் பொருளைத் துணிந்தவன் என்னும் கருத்தினது.

55--65. பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-பழம் பிறப்பையும் அறநெறியையும் முன்னை நல்வினையால் அறிந்த, நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் - நறிய மலர்மாலையணிந்த நங்கையே உவந்து கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த - தரும முதல்வனாகிய புத்தன் முதன்மையாகக் கூறிய, பெருமை சால் நல்லறம் பெருகாதாகி - பெருமையமைந்த நல்லறம் வளர்தலின்றி, இறுதிஇல் நற்கதி செல்லும் பெருவழி - அழிவில்லாத நற்கதியாகிய நிருவாணத்திற்குச் செல்லும் பெருநெறி, அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்கு - அறுகம்புல்லும் நெருஞ்சியுஞ் செறிந்து இடத்தை யடைத்தாற்போல, செயிர் வழங்கு தீக்கதி திறந்து - துன்பத்தையுடைய தீக்கதிக்கண் செல்லும் வழி திறக்கப்பட்டு நெருக்குதலின், கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது-ஆரவாரத்துடன் உயிர்கள் செல்லும் பொதுநெறியாகிய ஒரு கூற்றிலே
பட்டது (ஆகலின் அப்பெரு வழி), தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் - குளிர்ந்த பனியால்


1 சிலப். 28 : 165-6.