பக்கம் எண் :

பக்கம் எண் :167

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை

மூடப்பட்ட சிவந்த ஞாயிற்று மண்டலம், உண்டுஎன உணர்தல் அல்லது- உண்டு என்று அறிகின்ற அளவினை அன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது-சிறிதும் தெளிவாகக் கண்டறியப்படாத காட்சியைப் போன்றது ;

நிலமிசை நடந்து செல்லும் வழியை அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து அடைந்தாற்போல் நற்கதி செல்லும் பெருவழியைத் தீக்கதியிற் செல்லும் நெறிகள் திறந்து அடைத்தலால் என்க. பெருவழி ஒரு திறம் பட்டதென்க. உயிர் வழங்கு பெருநெறி என்றது பிறந்திறக்கும் உயிர்கள் செல்லும் பொதுவழி ; 1''''பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர், மலர் தலை யுலகத்துயிர்போகு பொதுநெறி......போகுதல் பொறேஎன்'''' எனச் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறிற்றாக வுள்ளது காண்க. ஆகலின் அப் பெருவழியென விரித்துரைக்க. இனி, தீக்கதி திறக்கப் பெருநெறி ஒருதிறம் பட்டமையின் பெருவழி காட்சி போன்றது என முடித்தலுமாம். அறுகை - அறுகு. செயிர் - குற்றமுமாம். காட்சி - தன்மை .

66--71.சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் - சிறிய நாராசம் நுழைந்த மணிகளின் துளையாகிய உள்ளிடத்தே, உலா நீர்ப் பெருங் கடல் ஓடாதாயினும் - பெரிய கடலில் உலாவுகின்ற நீர் முழுவதும் ஓடாதானாலும், ஆங்கத் துளைவழி உகுநீர்போல - அச் சிறிய துளையின் வழியே சிந்துகின்ற நீரைப்போல, ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு எனச் சொல்லும் உண்டுயான் - இவ்வுலகில் நல்ல அறங்களை அடைதலும் உண்டு என்று யான் மொழிவதும் உண்டு, சொல்லுதல் தேற்றார் மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் - அங்ஙன முரைப்பதை வளப்பம் மிக்க பெரிய பூமியின்கணுள்ள மக்கள் தெளியார் ஆகலின் ;

மக்கள் தேற்றாராதலின் என்க. ஏ : அசை ; தேற்றமுமாம். ஆதலின் - ஆயினும் என்றுமாம்.

72--82.சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்-சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும், தொக்கு ஒருங்கு ஈண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப - சேர்ந்து ஒன்றாகக்கூடித் துடிதலோகத்துள்ள சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து - இருளாற் பரவப்பட்டுக் கிடந்த அகன்ற இடத்தையுடைய பூமியின்கண், விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன - வரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற்போல, ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் பேரறிவாளன் தோன்றும் - ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான், அதன் பிற்பாடு -


1 சிலப். 28 ; 172-4.