பக்கம் எண் :

பக்கம் எண் :169

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை
 

சூரிய காந்தம் கதிரவன் ஒளியைக் காட்டுதல்போலத் திங்கள் முதலியன புத்தனது தோற்றத்தினைப் புலப்படுத்துமென்க. பொருளுக்கேற்ற உவமையில் புறவிருள் நீங்கக் கதிரோன் தோன்றுங்காலை என் விரித்துரைக்க. உறா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தங்கா என்றும் நடக்கும் என்றும் கூறுதலின் நாண்மீன் என்பதற்கு ஈண்டு ஞாயிறு திங்க ளொழிந்த கோட்கள் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தும் ; நட்சத்திரங்களையே தோற்றம்பற்றி அங்ஙனம் கூறினாரெனலுமாம். ஊனுடையுயிர்கள்-தேவரல்லாத மக்கள் முதலிய உயிர்கள் : 1"ஊனடைந்த வுடம்பின் பிறவியே" என்பது காண்க. ஊன் உடை-உடம்பு மெலிந்த என்பாருமுளர். மாதிரம் - மலையுமாம். 2;"வலமா திரத்தான் வளிகொட்ப," "மாதிரங் கொழுக்க என்றார் பிறரும். நிறை - நிறைய : விகாரம் ; சால் என்பாருமுளர். விலங்கு முதலியவற்றை அவ்வவ் வினமெனக் கொள்க ; அன்றித் திணை விரவி அஃறிணை முடிபுற்றன என்னலுமாம். அஞர் - துன்புறுதலை; துன் புறத்தலை என்றலுமாம். கூன் முதலிய ஆறனோடு, குருடு, உறுப்பில் பிண்டம் ஆகிய இரண்டுங்கூட்டி எண்வகை எச்சமென்பர்; 3"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனுங் குறளு மூமுஞ் செவிடும், மாவு மருளுமுளப்பட வாழ்நர்க், கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்" என்பது காண்க.

99--107.அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் - அந்நாளில் பிறந்த புத்தனது அருளறத்தைக் கேட்டோர்கள், இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் - துன்பந்தரும் பிறவியைக்கடந்தவர்கள் ஆகலினால்; போதி மூலம்பொருந்திய சிறப்பின்-அரசமரத்தடியிலமர்ந்த சிறப்பினையுடைய, நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் - தலைவன் திருவடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்தலை, பிறவி தோறும் மறவேன் மடக்கொடி - மடக்கொடியே யான் பிறவி தோறும் மறவேன், மாதர் நின்னால் வருவன இவ்வூர் ஏதுநிகழ்ச்சி யாவும் பலவுள-நங்காய் நின்னால் இவ்வூரில் உண்டாவனவாகிஏது நிகழ்ச்சிகள் பல உள்ளன, ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது - அவை நிகழ்ந்த பின்பன்றி, பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்-பூங்கொடிபோலும் மாதே அறவுரை கேளாய்;

அருளறம் - தயாதன்மம்; அருளிய அறம் என்றுமாம். மறவேல் எனப் பிரித்துரைத்தலுமாம். ஏது நிகழ்ச்சி என்பதுபற்றி முன்னர் (3 : 4) உரைத்தமை காண்க. மாதர் என்பன விளி. பொருளுரை - மெய்யுரை : ஈண்டு அறவுரை; பொருள்-மெய்மையாதலை 4"பொய்யில் புலவன் பொருளுரை" 5"பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பவற்றானும், 6"பொருள் சேர் புகழ்" என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையாணும் அறிக.


1 பெரியபு. பாயிரம் 2  2 மதுரை. 5. 10.  3 புறம். 28.  4 மணி. 22: 61.  5 சிலப். 28: 168.  6 குறள். 2: 5.