பக்கம் எண் :

பக்கம் எண் :171

Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
 

[அப்பொழுது அறவணவடிகள் மணிமேகலையை நோக்கி, நினக்கு அப் பாத்திரம் அருளிய ஆபுத்திரன் வரலாற்றைக் கூறுவேன்; கேட்பாயாக; வாரணாசிரமத்தில் உள்ள ஆரண உபாத்தியாகிய அபஞ்சிகன் என்னும் அந்தணன் மனைவி சாலியென்பாள் தீயொழுக்கத்தாற் கணவனைப் பிரிந்து குமரியாடச் சென்றவள் சூலால் வருந்தி வழியிடையே ஒரு குழவியை ஈன்று இரக்கமின்றி அக்குழவியை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கினள்; நீங்கவே அக்குழவி பசியால் வருந்தியழுதது ; அவ்வழுகை யோசையைக் கேட்ட ஒரு பசு அவ்விடத்து வந்து அதன் வருத்தந் தீரும்படி நாவால் நக்கிப் பாலூட்டி ஏழுநாள் காறும் அப்புறஞ் செல்லாது பாதுகாத்து வந்தது; அங்ஙனம் நிகழுகையில், வயனங்கோ டென்னும் ஊரிலுள்ள பூதியென்னும் அந்தணன் பார்ப்பனியோடும் அவ்வழியே வருவோன் அக்குழவியின் அழுகை யொலியைக் கேட்டுச் சென்று, அதனைக் கண்டு  மிக்க துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, ''இவன் ஆமகனல்லன்; என் மகனே'' என்று கூறி எடுத்துச் சென்று ஊரினை அடைந்து மகிழ்வுடன் வளர்த்துத் தன் மரபிற்குரிய கல்விகளைப் பயிற்றி வந்தான்; அவற்றை நன்கனம் பயின்ற அவன் ஒருநாள் அவ்வூரிலுள்ள ஓர் அந்தணன் இல்லிற் புகுந்து, அங்குள்ள வேள்விச் சாலையில் ஓர் ஆன், வேட்டுவர் வலையிற்பட்ட மான் போல் அஞ்சிக் கதறுவதைக் கண்டு உளம் நடுங்கிக் கண்ணீருகுத்து, பகல் முழுவதும் ஒரு பக்கத்தில் மறைந்திருந்து, இரவில் அதனைக் கைப்பற்றி ஊருக்கு வெளியே போய்விட்டான் ; ஆவைக் காணாத அந்தணர் பலர் அதனைத் தேடிச்சென்று வழியிற் பசுவையும் அவனையும் கண்டு அகப்படுத்தி, ''''புலைச் சிறுமகனே ! இதனை இரவில் ஏன் கவர்ந்து சென்றனை?'''' எனக் கேட்டு, அவனைக் கோலால் ஒறுக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்களுள் மிகவும் துன்புறுத்திய உவாத்தியை அப் பசு கொம்பினாற் குத்திக் குடரைப் பறித்துக் காட்டின்கண் விரைந்தோடியது. ஆபுத்திரன் அன்னாரை நோக்கி; ''''நோவன செய்யன்மின் ; பயிர் செய்யாது விடப்பட்ட நிலத்தில் தானே முளைத்த புல்லையுண்டு, மக்கள் பிறந்த நாள் தொட்டுத் தன் இனிய பாலை அருள் சுரந்தூட்டும் ஆவினிடத்து நுங்கட்குச் செற்ற முண்டாயது எங்ஙனம்?'''' என்று கேட்க, அவர்கள், ''''நீ வேதவிதியை அறியாமல் வேள்வியை இகழுகின்றனை ; ஆதலின், ஆ மகனாதற்குப் பொருத்தமுடையையே,'''' என்றிகழ்ந்துரைத்தலும், ஆபுத்திரன்,
 

''''ஆன்மகன் அசலன் ; மான்மகன் சிருங்கி ;
புலிமகன் விரிஞ்சி ; புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன் ?
ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று
ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்;
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?''''