பக்கம் எண் :

பக்கம் எண் :180

Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

57--62. பொன் அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னாலாகிய அழகிய வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதலவன் மகன் எமக்கு அருளிய- நிலைபெற்ற உயிர்கட்கு முதல்வனாகிய திருமாலினுடையமகனான நான்முகன் எங்கட்கு அருளிச்செய்த, அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ - சுழலுகின்ற உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை - அப் பசுவின் புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும் ;

வலங்கொள் - வெற்றியைக் கொள்ளும் என்றுமாம். தெருமரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும் அறிவிலா னென்பார், ''ஆ மகனாதற் கொத்தனை'' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம். மகனல்லாய் என்பதற்கு இக் காதையுள்முன் உரைத்தமை காண்க.

63--9. ஆன்மகன் அசலன் - அசலன் என்பவன் பசுவின் மகன், மான் மகன் சிருங்கி-சிருங்கி என்பான் மானின் மகன், புலி மகன் விரிஞ்சி - விரிஞ்சி யென்பவன் புலியின் மகன், புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் -மேலோர் போற்றும் கேசகம்பளன் நரியின் மகன் அல்லனோ, ஈங்கிவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று - இவர்களெல்லாம் நும் குலத்து வந்த முனிவர் கூட்டம்என்று, ஓங்குயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் - மிக உயர்ந்த பெருஞ் சிறப்புக் கூறுதலும் உண்டாகலால், ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து என - நான்மறை யந்தணீர் நும் மறை நூலிடத்து ஆவால் வந்த அழிகுலம் உண்டோ என வினவ ;,

புரையோர் போற்றும் கேசகம்பளனெனக் கூட்டுக. உண்டால்- உண்டாதலால்; ஆல்: அசையுமாம். ஆவொடு - ஆவால். அழிகுலம் - இழிகுலம். நன்னூலகத்து ஆவினால் அழிகுலமுண்டாயதென்று கூறப்பட்டுள்ளதோ என்றபடி. ''ஆமகனாதற் கொத்தனை'' என அந்தணர் இகழ்ந்தனராதலின், அதனைப் பரிகரித்தற்கு ''ஆவொடு வந்த அழிகுல முண்டோ'' என்றான்.

70-1. ஆங்கவர் தம்முள் ஒரு அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என - அம் மறையவர்களுள் ஒருவன் இவனுடைய பிறப்பையான் அறிவேன் என்று கூறுவான் ;

72-7. நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்-வழிக்கொண்ட வருத்தத்துடன் இளைத்த உடம்பை யுடையவளாகிய, வடமொழி யாட்டி-பார்ப்பனி, மறை முறைஎய்தி-வேத விதிப்படி சென்று குமரிபாதம் கொள்கையின் வணங்கி - குமரித் தெய்வத்தின்