பக்கம் எண் :

பக்கம் எண் :183

Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
 

அங்ஙனமாகவும் இவர்கள் இட்டனரென இரங்கியவாறு. யாரும் கடிஞையிற் கல்லிடாரென்பதனை, 1 ''''நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி, மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த, குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட, கடிஞையிற் கல்லிடுவா ரில்'''' என்னும் பழமொழி வெண்பாவானறிக. சிந்தாதேவி - கலைமகள்; அவளுறையுங் கோயிலாகலின் அது கலை நியமம் எனப்பட்டது ; நியமம் - கோயில். அந்தில் : அசை. பீடிகையையுடைய அம்பலத்தி லென்றுமாம்.

108-15 அத் தக்கணப் பேரூர் - அம் மதுரைமா நகரில், ஐயக் கடிஞை கையின் ஏந்தி - பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி - குற்றமற்ற சிறப்பினை யுடைய மாடங்கள்தோறும் சுழன்று, காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்-குருடர்செவிடர் முடவர் பாதுகாப்போர் அற்றோர் நோயால் துன்புறுவோர் ஆகிய, யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி - அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, உண்டு ஒழி மிச்சில் உண்டு - அனைவரும் உண்டு எஞ்சிய உணவை யுண்டு, ஓடு தலை மடுத்து - அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, கண்படை கொள்ளும் காவலன் தான் என்-உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன் என்க.

உண்டொழி மிச்சிலுண்டு என்பது 2 ''''விருந்தோம்பி மிச்சின் மிசைவான்'''' என்பதன் பொருளைத் தழுவி வந்துளது. தலைமடுத்து-தலையின்கீழ் அகப்படுத்து. காவலன் - காத்தலை யுடையவன்.

அணியிழை, ஆபுத்திரன் திறம் கேளாய் ; பார்ப்பனி சாலி கழிந்து அஞ்சி வருவோள் இரங்காளாகிக் குழவியை இட்டு நீங்க ஆ கேட்டு அணைந்து நக்கி ஊட்டிப் போகாது ஓம்ப, பூதி யென்போன் கேட்டு உகுத்து என் மகனென்று எடுத்துப் பெயர்ந்து கூடி நவிற்ற, அறிந்த பின் புக்கோன் ஆதுயர் கண்டு உற்று உகுத்துஉள்ளங் கரந்து ஒதுங்கி அகன்றோனாய்க் கடவாநின்றுழி, அந்தணரெல்லாம் மாக்களோடு சென்று கையகப்படுத்திக் கேட்ப, நல்லா குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன் உரைப்போன், ''உரைமோ'' என, அந்தணர் இகழ்தலும், ஆபுத்திரன், ''நன்னூலகத்து ஆவொடு வந்த அழிகுல முண்டோ'' என, ஓரந்தணன் உரைக்கும் ; உரைப்பவன், ''புல்லலோம்பன்மின் ; புலை மகன் இவன்'' என, ஆபுத்திரன் நகை செய்து, ''சாலிக்குத் தவ றுண்டோ'' என்றுரைத்து நகுவனன் நிற்ப,பூதி ஒவ்வா னென்று கடி தர, கிராம மெங்கணும் கல்லிட, மதுரை சென்றெய்தி வதிந்து ஏந்தி மறுகி இசைத்து ஊட்டி மிச்சிலுண்டு மடுத்துக் காவலன் கண்படை கொள்ளும என வினைமுடிவு செய்க.

ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை முற்றிற்று.


1 பழ. 246.  2 குறள். 85.