பக்கம் எண் :

பக்கம் எண் :190

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 

ஓம்பலின் - வாங்குகின்ற கை வருந்துமாறு மன்னுயிர்களைப் பாதுகாத்தலினால், மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும் தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ - மக்களும் விலங்குகளும் மரங்களிலுள்ள புட்களும் ஒருமிக்கச்சேர்ந்து திரண்டு சுற்றிக்கொண்டு விடாவாய், பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்-பழுத்த மரத்தின்கண் கூடிய பறவைகளைப்போல்எழுப்பும், இழுமென் சும்மை இடையின்று ஒலிப்ப - இழுமென்னும் ஓசை இடையீடின்றி ஒலித்துக்கொண்டிருப்ப, ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல்-மிகுந்த நீரினையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகில் இவன் புரிந்த அறச்செயல், இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்-இந்திரனது வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச்தெய்தமையால் அவன் ;

மக்களும் மாவும் பறவையும் எனத் திணைவிரவிச் சூழ்ந்தனவென அஃறிணை முடிவு பெற்றன. விடா - விடாவாய் : எச்சம். பழுமரம்-ஆலமரமுமாம். எழூஉம்-எழுப்பும் : பிறவினை. இடை - இடையீடு. இவ்வுலகிலே தானம் சீலம் முதலியவற்றில் மேம்பட்ட பௌத்தர் உளராயினும், அவர்கட்கு ஏதேனும் துன்பம் உளதாயினும் இந்திரனுடைய பாண்டு கம்பளம் நடுங்குமென்றும், அக்குறிப்பால் அவற்றையறிந்து வந்து அவர்கட்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தலும், துன்பத்தை நீக்குதலும் இந்திரனுடைய கடப்பாடென்றும் தெரிகின்றது.

30--5. தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி-நடை தளர்தலால்தான் பிடித்த தண்டையே காலாக ஊன்றிக்கொண்டு கூனிய உடலையுடைய ஒரு மறையவனாகி, மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் - மிகப் பெரிய பூமியில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கும், ஆருயிர் முதல்வன் தன் முன் தோன்றி - ஆருயிர் முதல்வனாகிய ஆபுத்திரன் முன்னர்த் தோன்றி, இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து - யான் இந்திரன் ஈண்டு வந்தேன் நின் எண்ணம் யாது, உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க என - நினது பெரிய தானத்தினாலாகிய மிக்க பயனைக் கொள்வாயாக என்றுரைப்ப ;

சிலப்பதிகாரத்துள்ளும் இவ்வாறே 1"தளர்ந்த நடையிற் றண்டு காலூன்றி, வளைந்த யாக்கை மறையோன்." என வந்துளது, 2"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என்ப வாகலின் ஆபுத்திரனை ''ஆருயிர் முதல்வன்'' என்றார். எல்லாத் தானத்தினும் அன்னதானம் சிறந்ததாகலின் பெருந்தானம் எனப்பட்டது.

36--48. வெள்ளை மகன்போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் போம் என்று எடுத்துரை செய்வோன்-விரகில்லா மகனைப்போல விலா வெடிக்குமாறு சிரித்து இகழ்ச்சியுடையனாய்ப் போம் என்று


1 சிலப். 15 : 44-5. 2 புறம் : 18.