பக்கம் எண் :

பக்கம் எண் :191

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 

எடுத்துக் கூறுகின்றவன், ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்டகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது - காணத்தக்க அழகின் சிறப்பினை யுடைய நும் கடவுளர் இவ் வுலகிற்செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்திருத்தல் அல்லது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் - அறம் புரியும் மக்களின் எளிய உயிர்களைப் பாதுகாப்போர், நற்றவம் செய்வோர் பற்று அற முயல்வோர் - நல்ல தவங்களைச் செய்கின்றோர் பற்றுக்களை அறுத்தற்கு முயற்சி செய்வோர் ஆகியவருள், யாவரும் இல்லாத்தேவர் நன்னாட்டுக்கு - ஒருவருமில்லாத விண்ணவருலகிற்கு, இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே - தலைவனாகிய பெருவலியுடைய தேவர்கோனே, வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை - எனது கடவுட் கடிஞை வருத்தத்துடன் வந்தோரது பொறுத்தற்கரிய பசியை நீக்கி அவர் இனிய முகத்தை யான் காணுமாறு காட்டும், உண்டிகொல்லோ உடுப்பன கொல்லோ-உண்டபனவோ உடுப்பனவோ, பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ - மகளிரோ வேறு விரும்புவோரோ, யாவை ஈங்கு அளிப்பனதேவர் கோன் என்றலும் - விண்ணவர் தலைவனே நீ இப்பொழுது எமக்கு அளிப்பன யாவை என்றுரைத்தலும் ;

வெள்ளை மகன் - கரவில்லா மகனுமாம். விலாவிற நகுதல் - பெருகச் சிரித்தல் ; 1"வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே" என்றார் திருநாவுக்கரசரும். போம்: ஏவற்பன்மை. நுங் கடவுளர் என்றான் தனக்கு அவர் அயலென்னுங் கருத்தால் 2"நின்றநின் கார்மயி றன்னையும்" என்புழிப்போல. அறஞ்செய மாக்கள் முதலியோர் இல்லாவெனவே கடவுளர் அறஞ்செய்தல்முதலியன உடையரல்லர் என்றவாறாயிற்று ; நுகர்ந்திருத்தலையுடைய கடவுளரல்லது யாவருமில்லா என்றலுமாம். இக் கருத்து, 3"பொலம் பூங் காவி னன்னாட்டோரும், செய்வினை மருங்கி னெய்த லல்லதை, உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையறவுடைத்து" 4"ஈவாருங் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர்" என்பவற்றுள் அமைந்துள்ளமை காண்க. நன்னாடு என்பதும், பெருவிறல் வேந்து என்பதும் இகழ்ச்சி. தெய்வம்-தெய்வத்தன்மை. கடிஞை காட்டுமென்க; எனக்கு அதுவே அமையும் என்றவாறாயிற்று. திருந்து முகம் பெற்றோர் உவப்பாலுளதாவது ; 5"ஈத்துவக்கு மின்பம்" என்பது காண்க. பேணுநர் - நாட்டார் முதலியோர். திணைவிரவி யாவை என அஃறிணையாயிற்று. ஈங்கு, தன்மை. தேவர் கோன் : விளி.


1 திருநா. தே. 4. 75 : 3.  2 திருச்சிற். 76.   3 புறம். 38.  4 குறள். 1055. பரி. மேற்.   5 குறள். 228. ம.--13