பக்கம் எண் :

பக்கம் எண் :193

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை

வட்டு-உண்டை யுருட்டுதல் ; 1"கல்லாச் சிறா அர் நெல்லிவட் டாடும்" என்பது காண்க. வம்பக்கோட்டி - வீணர் கூட்டம். வட்டு, சூது என்பவற்றை ஆகுபெயராகக் கொண்டு உண்டை யுருட்டுவோரும் சூதாடுவோரும் என்றும், வம்பக்கோட்டியை விடர் முதலியவற்றோடு சேர்த்து, அவர்கள் வட்டாடுதலும் சூதாடுதலும் முட்டாத என்றும் உரைத்தலுமாம். பீடிகை ஒடுங்கியதாகிய முறைமையைதாக வென்க

65--75ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி-ஆபுத்திரன் அம்பலத்தினின்றும், நீங்கி, ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்-ஊரூராய் உண்போர் இருக்கின்றனரா என்று வினவிக்கொண்டு, யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்கு-இவன் யார் என்று அனைவரும் இகழ்தலால், அருந் தேமாந்த ஆருயிர் முதல்வனை-பிறர் உண்ண ஆவல்கொண்டு ஆபுத்திரனை, இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் - நீ இருக்கின்றாயோ என்பவர் ஒருவரும் இல்லாமையால், திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள - தனது பெருஞ்செல்வத்தைப் பெரிய கடலானது கொள்ள, ஒரு தனி வரூஉம் பெருமகன் போல - தன்னந்தனியே வரும் அரசனைப்போல, தானே தமியன் வருவோன் தன்முன் - தான் மட்டும் தனியனாய் வருகின்றவன் முன்னே, மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி-கடலில் மரக்கலத்திலிருந்து வந்தோர்கள் வணங்கி, சாவக நன்னாட்டுத் தண் பெயல் மறுத்தலின்-சாவக நாட்டின்கண் மழைவள மின்மையால், ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் - பெரியோய் உடம்பொடு கூடிய உயிர்கள் பல இறந்தன என்று கூறுதலும் ;

இகழ்ந்து - இகழ்தலால் ; ஆங்கு : அசை. அருந்த என்பது விகாரமாயிற்று. நீ இருக்கின்றாயோ என நலம் வினவுவார் இன்மையால், இகழ்தலால் இன்மையின் என்க. திருவின் செல்வம் - அரசாட்சிக்குரிய செல்வம் பெருமகன்-அரசன். நாளும் உண்போர் பலரிடையே இருந்தவன் இப்பொழுது மிகத் தனிமையுற்றா னென்பார் ''தானே தமியன் வருவோன்'' என ஆசிரியர் இரங்கிக் கூறினர். உயிர் : சாதி யொருமை.

76--82.அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது - இந்திரன் ஆணையினால் உண்ணுவோரைப் பெறாமல், குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி - ஒரு கன்னிப்பெண் வறிதே மூத்தாற் போன்ற என் கடிஞையை ஏந்திக்கொண்டு, அங்குஅந் நாட்டுப் புகுவது என் கருத்து என-அச் சாவக நாட்டிற்குச் செல்லுவது என் எண்ணம் என்று, வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி - உவகையுடன் கலத்திற் செல்வோருடன் ஏறி, கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்-காற்றின் வேகம் மிகுதலினால் கடலானது கலக்க மடைந்தமையின், மால் இதை மணிபல்லவத்திடை


1 நற். 3.