|
["மணிமேகலை ! முன்பு ஆபுத்திரனுக்கு ஏழுநாள்காறும்
பாலூட்டிய ஆவானது அவ் வறத்தின் சிறப்பான் சாவக நாட்டிலே தவள மலையில்
தவஞ் செய்யும் மண்முக முனிவனிடத்தே பொன்னிறமான கொம்புகளுங் குளம்புகளுமுடையதாய்ச்
சென்று, ஈனுதற்கு முன்பே பால்சுரந்து எல்லா வுயிர்களையும் உண்பித்துக் கொண்டிருந்தது.
அது கண்டு மூன்று காலமும் தோன்ற வுணரும் அம்முனிவன் ''இவ் ஆன் வயிற்றில்
உயிர் காவலனொருவன். பொன்மயமான முட்டையினிடம் தோன்றுவன்'' என்று கூறினன்.
அறஞ்செய்தற்பொருட்டே மணி பல்லவத்தில் உயிர் துறந்த ஆபுத்திரன் தன்னைக்
குழவிப் பருவத்தே காத்தளித்த பசுவை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தவனாதலின்,
மண்முக முனிவன் கூறியவாறே அதன் வயிற்றிலுதித்தனன். அவன் தோன்றிய காலம்
வைகாசித் தூய நிறைமதி நாள் (வைசாக சுத்த பூர்ணிமை). அப்பொழுது சில நன்னிமித்தங்கள்
நிகழ்ந்தன. அதனை யறிந்த சக்கரவாளக் கோட்டத்துள்ள முனிவர்கள், ''புத்தன்
அவதரிக்குங் காலத்தில் நிகழும் நிமித்தங்கள் இப்பொழுது நிகழ்வதற்குக்
காரணம் என்ன'' என வியந்து அதனுண்மையைத் தெரிந்து கோடற்குக் கந்திற் பாவையை
அடைந்து வினாவினார். அது, ''மணி பல்லவத்தில் இறந்த ஓர் அறவோன் உயிர்களைப்
புரத்தற்காகச் சாவக நாட்டில் உதித்தனன்; அதனாற்றான் நன்னிமித்தங்கள்
நிகழ்ந்தன ; அவன் வரலாற்றை அறவணன்பாற் கேண்மின்'' என்று கூறி விடுத்து,
எனது நாவை வருத்தியது. மகப்பேறின்றி வருந்தும் அந்நாட்டரசனாகிய பூமிசந்திரனென்பவன்
மண்முக முனிவனை வணங்கி ஆவீன்ற அருங் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்று
வளர்த்து வந்தான். அச் சிறுவன் இப்பொழுது அரசுரிமை பெற்று வாழ்கின்றான்.
இது நிற்க, காவிரியானது மாறாது நீர்பெருகி இந் நாட்டை வளமுறச்செய்தும்
எக்காரணத்தாலோ உயிர்கள் வறுமையால் வருந்துகின்றன. ஆதலால் பாற்கடல்
தந்த அமிழ்தத்தைப் பயன்படுத்தாது வைத்திருப்பதுபோல மிகப் பயன்படுவதான
இவ் வமுதசுரபியை நீ சும்மா வைத்திருத்தல் தகுதியன்று," என்று கூறினர். அதனைக்
கேட்ட மணிமேகலை அப்பொழுதே அவரை வணங்கித் துதித்துப் பிக்குணிக் கோலம்
பூண்டு அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பெருந்தெருவடைந்தாள். அடையவே,
உச்சயினி நகரத்தரசனாகிய பிரச்சோதன னென்பவன் உதயணனை வஞ்சித்துச் சிறைப்படுத்திய
ஞான்று அவனைச் சிறை மீட்டற்கு அவன்றன் அமைச்சனாகிய யூகியென்பவன் வேற்றுருக்
கொண்டு வீதியை யடைந்தபொழுது அவனைக் கண்டு பரிவுற்றுப் பற் பலர் சூழ்ந்தாற்போல
மணிமேகலையைப் பலருஞ் சூழ்ந்துகொண்டனர். அப்பொழுது மணிமேகலை "கற்புடைய
மாதர் இடும் ஐயத்தையே
|