பக்கம் எண் :

பக்கம் எண் :203

Manimegalai-Book Content
15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

46--50.--துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ-வானுலகின் மன்னனாய இந்திரன் அவிநுகர்ச்சி இலனாயினனோ, அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்லோ - அறநெறியிற் செல்லுங்கோலினையுடைய அரசன் அருள் இல்லாதவனாயினனோ, சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் - காவிரியில் நீர் பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும், நலத்தகை இன்றி நல் உயிர்க்கெல்லாம் அலத்தற்காலை ஆகியது ஆயிழை - ஆயிழையே நன்மையுடைய உயிர்கட்கெல்லாம் இன்பம் இல்லையாக வறுமைக்காலம் உண்டாயிற்று, ஆகலின் ;

துய்ப்பு - அவியூண். துய்ப்பிலன் கொல்லோ என்றதனால் அதனை ஊட்டுவார் இலராயினரோ என்றவாறாயிற்று. மாதவர் வேள்வியும் அரசன் செங்கோலும் மழைக்குக் காரணமாகலின் துய்ப்பிலன்கொல்லோ அருளிலன் கொல்லோ என்றார்; "செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ,...அலத்தற் காலை யாகியது" (28 : 188 - 91) என மேல் வருவதுங் காண்க. அறக்கோல் வேந்தன் - சோழன். "சுரந்து பரக்கவும்" என்றது காவிரியின் சிறப்புக் கூறியபடி. நல்லுயிர் - மக்களுயிர்.

51--5. வெண்டிரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு-வெள்ளிய அலைகளையுடைய பாற்கடலளித்த அமுதினை உம்பர்கள் தாம் உண்டு கழித்த மிகுதியைப் பயன்படுத்தாது வைத்தாற்போல, வறன் ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும் - வற்கடம் பரந்த உலகினது பெரிய துன்பத்தைப் போக்கவல்ல, அறன் ஓடு ஒழித்தல் ஆயிழை தகாது என - அறத்தின் பெருக்கினையுடைய திருவோட்டைப் பயன்படுத்தாது வைத்தல் நங்காய் தகுதி யுடைத்தன்றென்று, மாதவன் உரைத்தலும் - அறவண முனிவர் கூறலும் ;

அமுதில் மிச்சிலாகியதனை என்க. ஒழித்து வைத்தல் - வறிதிருக்கும்படி வைத்தல். வறன் - வறுமை, வறட்காலம். ஓடுதல் - பரத்தல்; 1"வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்றார் பிறரும். அறன் ஓடு - அறம் பயக்கும் ஓடு; திருவோடு. "வறனோ டுலகின் மழை வளந் தரூஉம், அறனோ டேந்தி யாருயி ரோம்புவை" (21: 157 - 8) எனப் பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க.

55--8.மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி - மணிமேகலை தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும் அறவணவடிகளை வணங்கிப் பலவாறாகத் துதித்து, கைக்கொண்டெடுத்த கடவுள் கடிஞையொடு - தன் கையிலெடுத்துக் கொண்டுள்ள கடவுட்டன்மை பொருந்திய பிச்சைப் பாத்திரத்துடன் ;


1 கலி 16.