பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும் - பிக்குணிக் கோலமும் பூண்டு அகன்ற
வீதியை அடைதலும்;
பௌத்த சமயத் துறவிகளில் ஆடவர் பிக்ஷூக்கள்
என்றும், மகளிர் பிக்ஷூணிகள் என்றும் கூறப்படுவர். பிக்குணி: வடமொழிச் சிதைவு.
59--66. ஒலித்து
ஒருங்கு ஈண்டிய - ஆரவாரித்து ஒருங்கு கூடிய, ஊர்க்குறு மாக்களும்-அறிவில்லாத ஊர்ச்சிறாரும்,
மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் - காமத்தால் நைந்து கெடும் மனத்தினையுடைய
தீயோரும் பரத்தரும், கொடிக்கோசம்பிக்கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை
வத்தவன் தன்னை-கொடிகளால் அலங்கரிக்கப் பெற்ற கோசம்பி நகரத்தின் அரசனாகிய
திருந்திய தேர்ச் சேனைகளையுடைய உதயணனை, வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய
- உஞ்சை மன்னவன் பிரச்சோதனன் வஞ்சித்துச் சிறைப்படுத்தியவழி அவனை விடுவிக்கும்
பொருட்டு, உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் - உச்சயினி நகரில் வேற்று
வேடங்கொண்டு தோன்றிய யூகி யென்னும் அந்தணனது, உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு
பரிவுறு மாக்களில் தாம் பரிவு எய்தி - வடிவிற்கேலாத மிகுந்த நோயைக் கண்டு
துன்புற்ற மக்களைப் போலத் தாமும் இரக்கமுற்று ;
ஊரிலே திரியு மியல்பின ரென்பார்
''ஊர்க்குறு மாக்கள்'' என்றார். மெலித்து: மெலிந்து என்பதன் விகாரம். விடர்
தூர்த்தர் என்பவற்றிற்கு முன்னர் (14: 61) உரைத்தமை காண்க. கோசம்பி -
வத்த நாட்டின் தலைநகர். கோமகன் - கோமான் ; அரசன் ; அரசன் குமாரன் என்றுமாம். வத்தவன் - வத்த நாடுடைமையின் வந்த பெயர்; வத்தம்: வத்ஸம் என்பதன் திரிபு.
வத்த நாட்டின் கோசம்பி நகரத் தரசனாகிய உதயணனை உச்சயினி நகரத்தரசனாகிய
பிரச்சோதனன் சாலங்காயன் என்னும் தன் அமைச்சனால் எந்திர யானையைக் காட்டிப்
பிடித்துவரச் செய்து சிறைப்படுத்தினன் என்க. விடீஇய - விடுவிக்க; பிறவினை.
உஞ்சை - உச்சியினி ; அவந்தி நாட்டின் தலைநகர்; அவந்தி என்றும் கூறப்படும்.
யூகி-உதயணனுடைய அமைச்சருளொருவன். மிக்க சூழ்ச்சித்திறம் வாய்ந்தவன். அவன்
பெரு நோயுற்றவன் போலவும் மருள்கொண்டவன் போலவும் உஞ்சை நகரின் வீதியில்
திரிந்த பொழுது நகரத்தின் மாக்கள் பலரும் அவனைச் சூழ்ந்து பரிவுற்றனரென்பது
உதயணன் கதையால் அறியப்படும்.
67--70. உதயகுமரன் உளங்கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலான் வந்து தோன்றி - உதயகுமரனது உள்ளத்தைக்
கவர்ந்து மறைந்திருந்த தேன் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலை
இங்ஙனம் வெளிப்படத் தோன்றி, பிச்சைப் பாத்திரம்
|