கையின் ஏந்தியது திப்பியம் என்றே சிந்தை நோய் கூர - பிச்சைப் பாத்திரமும்
கையில் ஏந்தியது வியப்புடைத்தாம் என்று மிகுந்த மனவருத்த மடைய;
திப்பியம் - ஈண்டு வியப்பென்னும் பொருட்டு.
ஊர்க்குறு மாக்களும் விடரும் தூர்த்தரும், மாக்களிற் பரிவெய்தி, குழலாள் தோன்றி
ஏந்தியது திருப்பியமென்று நோய்கூர வென்க.
71--4.மணமனை
மறுகில்-மங்கல மனைகளையுடைய வீதியில், மாதவி ஈன்ற அணிமலர்ப் பூங்கொம்பு
- மாதவிபெற்ற அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போலும் மணிமேகலை, அகம் மலி
உவகையின் - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன், பத்தினிப் பெண்டிர் பண்புடன்
இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என - கற்புடை மகளிர் இனிதின் இடும்
பிச்சையை முதலில் ஏற்றல் மிகவும் தகுதியுடைத் தென்றுரைக்க ;
மாதவி...பூங்கொம்பு'' குருக்கத்தி யீன்ற
பூங்கொம்பு என்பதோர் கயந் தோன்ற நின்றது.
75--80.குளன் அணி
தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று-குளத்திற்கு
அழகு செய்யும் தாமரைச் செழுமலர்களின் நடுவண் ஒன்றாய் ஒப்பற்றுயர்ந்த அழகிய
தாமரை மலரைப்போல, வான் தரு கற்பின் மனைஉறை மகளிரில் - மழை வேண்டிற்
பெய்விக்குஞ் சிறந்த கற்பினையுடைய இல்லில்வாழ் பெண்டிருள், தான்தனி ஓங்கிய
தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் - ஆதிரை யென்னும் மெல்லியல் தான் இணையிலாச்சிறப்புடைய
தகுதியுடையள் அல்லளோ? அவள்மனை இம்மனை - அவளது திருமனை இதுவாகும், நீ புகல்வேண்டும்
நேரிழை என்றனள்- நங்கையே இதன்கண் நீமுதலிற் செல்லவேண்டும் என்று கூறினள்;
"பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்,
றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை" (4: 8-9) என்றார் முன்னும். திருமலர்
போன்று ஆதிரை நல்லாள் ஓங்கிய தகைமையள் என்க. கற்புடை மகளிர் வேண்டும்
பொழுது மழை பெய்விக்கும் ஆற்றலுடையரென்பது,
"1தெய்வந்
தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
என்னும் பொய்யா மொழியானும்,
"2வறனோடின்
வையகத்து வான்றருங் கற்பினாள்"
என்னும் பாலைக்
கலியானும் அறியப்படும். இக் கருத்து இந் நூலகத்துப் பின்னரும் (16: 49-50;
22: 68-9) வருதல் காண்க.
1
குறள் - 55. 2 கலி. 16.
|