பக்கம் எண் :

பக்கம் எண் :214

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி-சுடுகாட்டில் தோண்டப்பட்ட குழியின்கண் முறுக்குடைய காய்ந்த விறகுகளால் அழலை மூட்டி, மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும் - தீவினையேனது கணவன் வினைப்பயன் செலுத்தச் சென்றவிடத்து யானும் புகுவேன் என்று அத் தீயிடைப் புகுதலும்;

ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு. தாரீர் - தருவீர் ; ஓ : புலம்பல் ; தரமாட்டீரோ என்றுமாம். சுடலையாகிய கான் என்க. மிக்க-தீவினை மிகுந்த. மேன்மையுடைய வென்றுமாம்.

29--34. படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்-அதனுளகப்படுத்தி ஒருசேர வைத்த படுக்கையிடமும், உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது -- உடுத்திய ஆடையும் ஒள்ளிய அழல் பற்றாமல், ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது - பூசிய சாந்தமும் அசைகின்ற குழலிற் சூடிய மாலையும் பழைய நிறம் வழுவாமல், விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப - மணம் பொருந்திய தாமரை மலரில் ஒப்பின்றி வீற்றிருக்கும் திருமகள்போல இனிதே இருப்ப ;

படுத்து-அடுக்கியென்றுமாம். பாயல் - படுக்கை. பள்ளி - இடம். திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; இன்சாரியை அல்வழிக் கண்வந்தது. உறாது வழாது என்னும் எதிர்மறை யெச்சங்கள் இனிதிருப்ப என்னும் பிறவினை கொண்டு முடிந்தன. போன்று - போலுமாறு எனலுமாம். எரியும் ஈமத்திற்குச் செந்தாமரை மலரும், அதில் ஊறின்றியிருக்கும் ஆதிரைக்குத் திருமகளும் உவமை.

35--44. தீயுங் கொல்லாத் தீவினை யாட்டின்யேன் யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்-தீயினாலுங் கொல்லப்படாத தீவினையேன் இனி யாது செய்வேன் என்று அம் மெல்லியல் ஏங்குதலும், ஆதிரை கேள்-ஆதிரையே கேட்பாயாக, உன் அரும்பெறல் கணவனை - உனது பெறற்கருங் கொழுநனை, ஊர் திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி - தவழ்கின்ற அலைகள் அவ்வடத்திற் செலுத்த அவன் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் - நக்க சாரணராகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத்தை யடைந்தனன், பல்லியாண்டு இரான் - அவன் அங்கே பலவாண்டுகள் தங்கான், சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் - சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனது, வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-மரக்கலத்துடன் வந்து தோன்றுவன், நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீஎன-ஆகலின் நீ நினது பெரிய துயரினின்றும் நீங்குவாய் என்று, அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்-அசரீரி வானிலே தோன்றி மொழிதலும் ;