பக்கம் எண் :

பக்கம் எண் :216

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

அவர்களுடன் பேச, கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித்தொழுது உரையாடி - கொடுந் தொழிலையுடைய அன்னோர் அவனை வருத்தாது மருங்கே விலகிப் பணிமொழி கூறி, ஆங்கவர் உரைப்போர் - அவனுடன் கூறுகின்றவர், அருந்திறல் கேளாய் - அரிய வலியையுடையவனே கேட்பாயாக, ஈங்கு எம் குருமகன் இருந்தோன் - இங்கே எங்களுடைய ஆசிரியன் இருக்கின்றனன், அவன்பால் போந்தருள் நீ என - அவனிடம் நீ வந்தருள் என்ன, அவருடன் போகி - சாதுவன் அவர்களுடன் சென்று, கள் அடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் - கள்ளைக் காய்ச்சுகின்ற பானையும் மிகுந்த புலால் நாற்றமுடைய தசையும் வெள்ளிய என்புகளின் வற்றலும் கலந்துள்ள இருக்கையின் கண்ணே, எண்கு தன் பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி-கரடி தன் பெட்டையோடு இருத்தல் போல மனைவியுடன் அவன் இருந்த தன்மையைக் கண்டு, பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி-நாகர் மொழியாற் பேசுந் திறத்தால் அவனை வயமாக்கி அவன் பக்கத்தினனாகி, கோடு உயர் மரநிழல் குளிர்ந்தபின் - கிளைகள் ஓங்கிய மரத்தின் நிழலில் வெப்பந் தணிந்தபின்பு ;

கற்றனனாதலின் அவர்களுடன் பேச என விரித்துரைக்க. மாக்களாகிய, ஆங்கவர் என்க. அருந்திறல்: ஆகுபெயர். குருமகன்-குரு; தலை மகன். இருந்தோன்: முற்று. நாற்றம்: ஆகுபெயர். இருக்கை-இருப்பிடம்; கட்டிலுமாம். 1"பன்றி புல்வாய்" என்னுஞ் சூத்திரத்து ''ஒன்றிய'' என்னும் இலேசால் பிணவு என்பது கரடிக்குங் கொள்ளப்பட்டது. பெண்டு-மனைவி. அவன் பான்மையனாகி-அவன் அன்புக்குரியனாகி என்றுமாம்.

71--79.அவன் ஈங்கு நீ வந்த காரணம் என் என - நாகர் தலைவன் சாதுவனை நோக்கி ஈண்டு நீ வந்த காரணம் யாது என வினவி, ஆங்கவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும்-வணிகன் அவனுக்குத் தான் அலை செறிந்த கடலிற் பட்டதைக் கூறலும், அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் - அலைகின்ற கடலின்கண் துன்பமுற்ற இவன் உணவொன்றும் இன்றி வருந்தியுள்ளான் இரங்கத்தக்கான் ஆகலின், வம்மின் மாக்காள் - வாருங்கள் மக்களே, நம்பிக்கு இளையன் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என - இவ்வாண்டகைக்கு இளமை பொருந்திய ஒரு நங்கையை அளித்து விருப்பந்தரும் கள்ளும் புலாலும் வேண்டுமளவும் கொடுங்கள் என மொழிய, அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் - அம்மொழி கேட்ட சாதுவன்


1 தொல். மரபு. 58.