பக்கம் எண் :

பக்கம் எண் :218

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

எமக்கு ஈங்கு உரைத்தாய்-உடலை விட்டுப் பிரிகின்ற உயிரானது வேறு வடிவு கொண்டு ஓர் இடத்திற் புகும் என்று எமக்கு இப்பொழுது கூறினாய், அவ்வுயிர் எவ்வணம் போய்ப் புகும் அவ்வகை செவ்வனம் உரை என - அவ் வுயிர் எவ்வாறு சென்று புகும் அத்திறத்தினை நன்கு கூறுவாயாக என மொழிய ;

எள்ளல் பற்றி நகை பிறந்தது. செவ்வனம் - நேரே.

95-106.  (அதனைக் கேட்ட சாதுவன்,) சினவாது இது கேள்-சீற்றங் கொள்ளாது இதனைக் கேட்பாயாக, உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி - உயிரானது தன்னிடம் உறைகின்றபொழுது உடல் தன்பால் உறுகின்றதனை உணரும், மற்றைய உடம்பே மன்னுயிர் போனால்-அங்ஙனமாகிய உடலே தன்னிடம் நிலைபெற்ற உயிர் பிரிந்தால், தடிந்து எரி ஊட்டினும் தான் உணராது எனின் - வெட்டித் தீயின்கண் இட்டாலும் தான் அறியாது என்றால், உடம்பிடைப் போனது ஒன்று உண்டென உணர் நீ - அவ்வுடம்பிலிருந்து பிரிந்து சென்றது ஒன்று உண்டு என்பதை நீ அறிவாய், போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது-அங்ஙனம் சென்றோர்க்கு ஒரு புகுமிடம் உண்டு என்பதை, யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-யான் மட்டு மன்று எல்லோரும் அறிகுவர். உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் - யாக்கை இவ்விடத்தில் நீங்க உயிர் பல காவதங்கள் கடந்து நெடுந்தூரத்திற் செல்லுதல், கனவினும் காண்குவை-கனவின் கண்ணும் காண்பாய், ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது தெளி நீ - அங்ஙனம் சென்று அவ்வுயிர் தம் வினைப் பயனை நுகர்தற்குரிய உடலின்கண் புகுவதைத் தெளிவாய் நீ, என்று அவன் உரைத்தலும் - என்று சாதுவன் மொழிதலும் ;

உற்றதை யுணர்தல்-தட்பம் வெப்பம் முதலிய ஊற்றினை யுணர்தல். மற்றைய-முற்கூறிய என்றபடி; மற்றை என்பதனை அசையாக்கி, அவ்வுடம்பு என்னலுமாம். எனின் - ஆதலால் ஓரிடத்தைவிட்டுப் போனவர்க்குப் பிறிதோரிடம் உண்டென உலகியலாற் கூறினான், பூண்ட-ஏற்றுக்கொண்ட; ஏற்று நுகர்தற்குரிய என்றபடி.

106--111.   எரி விழி நாகனும்-தீப்போலுங் கண்களையுடைய நாகனும், நன்று அறி செட்டி நல்அடி விழ்ந்து - அறத்தினையறிந்த வணிகனது நல்ல அடியில் விழுந்து வணங்கி, கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறைவாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் - கள்ளையும் புலாலையும் கைவிட்டால் இவ்வுடம்பின்கண் தங்கி வாழ்கின்ற உயிரைப் பாதுகாத்த லறியேன், தமக்கு ஒழி மரபின் சாவுறு காறும் எமக்கு ஆம் நல்லறம் எடுத்துரை என்றலும்-தமக்கு அறுதியிட்ட முறைமையால் இறப்பினை எய்துமளவும் எமக்குப் பொருந்திய நல்ல அறங்களை எடுத்துக் கூறுக என்றலும் ;