பக்கம் எண் :

பக்கம் எண் :219

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

எரி விழி-எஞ்ஞான்றும் சினத்தினாற் சிவந்த கண். நன்று - அறம். செட்டி-செட்டு உடையவன் ; சிரேட்டி என்பதன் சிதைவுமாம். உறை- உறைந்து என வினையெச்சமாக்குக. தமக்கு - உயிர்கட்டு.

112--117   நன்று சொன்னாய்-நன்குரைத்தாய், நல் நெறிப்படர்குவை. நல்வழியிலே செல்வாய், உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் உரைக்கேன்-உனக்கு இயலும் வழியால் அறத்தினைக் கூறுவேன், உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்-கடலிற் கலமுடையப்பட்ட மக்கள் உயிர் தப்பி ஈண்டுச் சேர்ந்தால், அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி-கொல்லுந் தொழிலைவிட்டு அவர்களுடைய அரிய உயிரைக் காத்து, மூத்துவிளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகென - முதுமையுற்று இறக்கும் விலங்குகளைத் தவிர வேறு எந்த உயிரினிடத்தும் கொலைத் தொழிலை நீங்குவாயாக என்று சாதுவனுரைப்ப ;

முதுமையுற்று இறக்கும் விலங்குகளை மட்டும் உண்ணுக என்றான். தீத்திறம் - கொலை. ஓம்பி ஒழிகவென் றியையும்.

117--127.   சிறுமகன் உரைப்போன் - கீழோனாகிய நாகன் உரைப்பவன், ஈங்கு எமக்காகும் இவ்வறம் செய்கேம் - ஈண்டு எமக்குப் பொருந்திய இவ்வறத்தினைச் செய்யாநிற்பேம், ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்கென - நினக்கேற்ற அரிய பொருள்களைக் கொண்டு செல்க வென்று, பண்டும் பண்டும் கலங்கவிழ்மாக்களை உண்டேம் - முன்பெல்லாம் மரக்கலங் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று உண்டோம், அவர் தம் உறுபொருள் ஈங்கிவை- அவர்களுடைய மிக்க பொருள்களாகும் இங்குள்ள இவைகள், விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவை இவை கொள்கென - சந்தன மரங்களும் மெல்லிய ஆடைகளும் சிறந்த பொருட்குவைகளுமாகிய இவற்றையெல்லாம் கொள்க என்று கூற, எடுத்தனன் கொணர்ந்து - சாதுவன் அவைகளை எடுத்துக் கொணர்ந்து, சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கஞ் சேர்ந்ததில் - சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலம் வந்ததில், வந்து உடன்ஏறி - உடன் ஏறிவந்து, இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து - இந் நகரத்தை யடைந்து இவ்வாதிரையுடன் வாழ்ந்து, தன் மனை நன் பல தானமும் செய்தனன் - தனது மனையின் கண் பல நல்லறங்களையுஞ் செய்தனன்.

உரைப்பவன் அரும்பொருள் கொள்கெனப் பொதுவிற் கூறிப் பின்பு அவற்றை விதந்து, இவை யிவை கொள்க வென்றுரைக்க வென்க. விரைமரம் - மணமுடைய சந்தனம் அகில் முதிலிய மரங்கள். சேர்ந்ததாகிய வங்கத்திலென்க.

ஆங்ஙனமாகிய ஆதிரை கையால் - அத் தன்மையளாகிய ஆதிரையின் கையால், பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென