பக்கம் எண் :

பக்கம் எண் :220

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை

- பூங்கொடியனைய மெல்லியலே நீ பிச்சை பெறுவாயாக வென்று உரைக்க, மனையகம் புகுந்து மணிமேகலைதான் - மணிமேகலை ஆதிரையின் இல்லத்திற் சென்று, புனையா ஓவியம்போல நிற்றலும் - அணி செய்யப்படாத ஓவியப்பாவை போல நிற்றலும், தொழுது வலங்கொண்டு - வலம்வந்து வணங்கி, துயரறு கிளவியோடு - இன்சொற்களோடு, அமுதசுரபியின் அகன்சுரை நிறை தர - மணிமேகலை கையிற் கொண்ட அமுதசுரபியினது அகன்ற உள்ளிடம் நிறையுமாறு, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென் - ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலக முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள் என்க.

பெறுகென - பெறுகவென்று காய சண்டிகை உரைக்க. புனையா ஓவியம் - வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின ஓவியம் எனலுமாம்: 1''''புனையா வோவியங் கடுப்ப'''' என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. பிச்சை யேற்கும்பொழுது துறவறத்தினர் மோனமாக நிற்றல்வேண்டு மென்பவாகலின், ''புனையா வோவியம் போல நிற்றலும்'' என்றார். துயரறுகிளவி - இன்சொல்.

ஆதிரை தொழுது கிளவியோடு பசிப்பிணியறுகெனக் கூறி நிறை தர இட்டனளென்க.

விஞ்சையர் பூங்கொடி மாதர்க்கு உரைப்போள், ''ஆங்ஙனமாகிய ஆதிரை கையாற் பிச்சை பெறுக'' என்று சொல்ல, மணிமேகலை மனையகம் புகுந்து நிற்றலும், ஆதிரை வலங்கொண்டு ஆருயிர் மருந்து இட்டனள் என முடிக்க.

ஆதிரை பிச்சையிட்ட காதை முற்றிற்று.


1 நெடுநல். 147