பக்கம் எண் :

பக்கம் எண் :221

::TVU::
17. உலகவறவி புக்க காதை
[ஆதிரை யளித்த பிச்சையை முதலில் மணிமேகலை ஏற்ற பின்பு, அமுதசுரபியிலுள்ள சோற்றுத் திரளை, அறநெறியி லீட்டிய பொருள் வழங்குந்தோறும் குறையாமல் வளர்வதுபோல எடுக்க எடுக்கக் குறைவின்றி வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அது கண்ட காய சண்டிகை வியந்து மணிமேகலையை வணங்கி, ''அன்னையே! எனது தீராப் பசியையும் தீர்த்தருள்க'''' என்று வேண்ட, உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி யமுதையெடுத்து அவள் கையிலிட்டாள். அதனை யுண்டு பசி நோய் தீர்ந்து மகிழ்ந்த காயசண்டிகை ''''வடதிசைக் கண்ணே விஞ்சைய ருலகிலுள்ள காஞ்சனபுரமென்பது என்னுடைய ஊர் ; தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்களைக் காண்டற்கு விரும்பிக்கணவனும் யானும் புறப்பட்டுப் போந்து இடையேயுள்ள கான்யாறொன்றின் கரையிலிருந்தோம் ; இருக்கையில், விருச்சிகனென்னும் முனிவனொருவன் பாரணஞ் செய்தற்குப் பனங்கனி போன்ற பருத்த நாவற் கனியொன்றைத் தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். அக் கனியின் இயல்பினை யறியாத நான் பழவினையால் அதனைக் காலாற் சிதைத்துக் கெடுத்தேன். நீராடி மீண்டு வந்த முனிவன் அக் கனி என்னாற் சிதைந்தமையை அறிந்து சினந்து, என்னை நோக்கி, ''தெய்வத்தன்மை யுடையதும் பன்னீராண்டிற் கொருமுறை ஒரே கனியைத் தருவதுமாகிய நாவல் மரத்திலுண்டானது இக்கனி ; இதனை யுண்டோர் பன்னீராண்டு பசி யொழிந்திருப்பர் ; யானோ பன்னிரண்டாண்டு பட்டினியிருந்து ஒருநாளுண்ணும் நோன்புடையேன் ; உண்ணும் நாளும் இந்நாளே ; உண்ணக் கருதிய கனியும் இக்கனியே; இதனை நீ யழித்துவிட்டாய்; ஆதலால், நீ வான் வழியே செல்லும் மந்திரத்தை மறந்து, யானைத்தீயென்னும் நோயால் பன்னிரண்டாண்டு தீராப் பசி கொண்டுழந்து, பின்பு இக்கனியை யான் உண்ணும் நாளில் பசியொழியப் பெறுவாய்'' என்று கூறி வருந்திப் போயினன். உடனே பெரும் பசி என்னைப் பற்றியது ; அதனால் மிக வருந்தினேன் ; அது கண்ட என் கணவன் காய் கனி கிழங்கு முதலியவற்றை மிகக் கொணர்ந்து என்னை உண்பிக்கவும் அப்பசி தீராதாயிற்று. அந்தரஞ் செல்லும் மந்திரமும் என் நினைவுக்கு வந்திலது. அதனால் வருந்திய என் கணவன், ''நீ நடந்து சென்று தமிழ் நாட்டிலே ஆற்றா மாக்கட்கு அருந் துணையாகிச் செல்வர்கள் வாழ்ந்திருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து அங்கே தங்குவாயாக'' என்று சொல்ல, நான் அவ் வண்ணமே போந்து இங்கிருக்கின்றேன். ஒவ்வோராண்டிலும் இங்கு இந்திரவிழா நடக்கும்பொழுது என் கணவன் வந்து என் வருத்தத்தைப் பார்த்துத் தானும் வருந்திப் பின்வரும் யாண்டினை எண்ணிச் செல்வன். தணியாத வெம்பசியைத் தணித்தனை. யான் என் பதிக்கேகுவேன். இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்ப தொன்றுண்டு; அதன்