அடலருமுந்நீர் அடைத்த ஞான்று - திருமால் மயக்கத்தால் நிலமிசை
இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது, குரங்கு
கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்-குரங்குகள் கொண்டுவந்து வீசிய
பெரிய மலைகளெல்லாம், அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு - வருத்தந்
தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற்போல, இட்டது ஆற்றாக் கட்டழல்
கடும்பசி பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் - இட்ட உணவுகளால்
தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால்
அடைந்தேன், அன்னைகேள் நீ - தாயே நீ கேட்பாயாக, ஆருயிர் மருத்துவி
துன்னிய என்நோய் துடைப்பாய் என்றாலும் - அரிய உயிரைப் பாதுகாக்க
வல்ல மருந்தினையுடையாய் நெருங்கிய எனது பசிப்பிணியைக் களைந்தருள்வாய்
என வேண்ட ;
யானைத் தீ நோய்
- பெரும்பசியைச் செய்யும் நோய் ; பஸ்மக வியாதி எனவும் படும்.
மயங்கி - அவிச்சையான் மயங்கி ; 1''''இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி, மாசறு காட்சி யவர்க்கு'''' என்பதனால்
அவிச்சை பிறப்பிற்குக் காரணமாத லறிக ; நெடியோன் தோன்றி மயங்கி
என மாற்றி, திருமால் இராமாவதாரத்தில் பருவத முனிவரும் நாரதரும்
அம்பரீடனுக் கிட்ட சாபமாகிய இருளைத் தான் ஏற்றுக் கொண்டமையால்
அதனால் மூடப்பட்டுத் தன்னை மாயனென் றறியாது மயங்கி யிருந்தனன்
என்னும் இலிங்க புராணக் கதையை ஏற்றியுரைப்பாருமுளர். இனி மயங்கி
யென்பதற்குச் சீதையைப் பிரிந்து கையா றெய்தி யென் றுரைத்தலுமாம்.
முந்நீர் - படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது
; கடல். மலைகளால் கடலின் வயிறு நிரம்பாமைபோல உணவுகளினால்
என் வயிறு நிரம்பிற்றில்லை யெனத் தானுண்ட உணவின் மிகுதியும்
பசியின் கொடுமையும் புலப்பட உவமங் கூறினாள். இட்டது : வினைப்பெயர்.
ஆருயிர் மருந்து- அடிசில், மருத்துவி - மருந்தினையுடையாள்.
காரிகை நோக்கி
வணங்கி, ''என்னோய் துடைப்பா'' யென்றலு மென்க.
17--20. எடுத்த பாத்திரத்து ஏந்திய
அமுதம் பிடித்து அவள் கையில் பெய்தலும்-மணிமேகலை தான் கையிற்
கொண்ட அமுத சுரபியிலுள்ள அன்னத்தை எடுத்துப் பிடியாக அவள் கையில்
இட, வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித்தொழுதனள்
உரைக்கும்-காயசண்டிகை வயிற்றில் எரிகின்ற கொடிய பசி நீங்கத்
தன் துயரமும் நீங்கி மணிமேகலையைத் தொழுது கூறுகின்றாள் ;