பக்கம் எண் :

பக்கம் எண் :232

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
 
[மணிமேகலை பிக்குணிக் கோலங்கொண்டு பாத்திரமேந்தி ஐயமேற்று உலக வறவியிற் சென்றாளென்பதைக் கேட்ட சித்திராபதி உளங்கொதித்து வெய்துயிர்த்துக் கலங்கி, "மணிமேகலையின் இச் செய்கையை ஒழிப்பேன்" என்று எண்ணிக்கொண்டு, கூத்தியல் மடந்தைய ரெல்லாரையும் பார்த்து, "கோவலன் இறந்தது கேட்டு மாதவி முனிவர்களின் பள்ளியை அடைந்து தாபதக் கோலம் பூண்டிருத்தல் நகைக்கத் தக்கது; யாம் கணவனுடன் இறக்கும் பத்தினிப் பெண்டிரல்லேம்; பாணன் இறந்தபொழுது அவனுடன் இறவாத யாழினைப் போல்வேம்; மற்றும் தாதினை யுண்டு பூவைத் துறக்கும் வண்டுபோல்குவம்; தாபதத் கோலந் தாங்குவது நமது குல வொழுக்கத்திற்கு ஒத்ததன்று ; மாதவி மகள் மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தை மாற்றி அவள் கையிலேந்திய ஐயக் கடிஞையைப் பிச்சையேற்பார் பிறர் கையிற் போக்கி, அவளைப் பலநாளாக விரும்பியிருக்கும் உதயகுமரனால் அவனது தேரிலேற்றுவித்து வருவேன்; அங்ஙனஞ் செய்யேனாயின், குடிக்குற்றப்பட்டு ஏழு செங்கலைத் தலைமேலேற்றிக் கொண்டு நாடக வரங்கைச் சுற்றிவந்து பழியோடிருக்கும் நாடக மகளிர்போல இனி நான் நாடகக் கணிகையர் மனைகட்குச் செல்லேனாகுக" என்று சூளுறவு செய்து, தன்னைச் சிலர் சூழ்ந்துவரச் சென்று உதயகுமரன் இருப்பிடத்தை யடைந்து, பளிங்கு மண்டபத்திலே தூமலர்ப் பள்ளியில் இருந்தோனைக் கண்டு துதித்து, மணிமேகலை உலகவறவியை அடைந்திருக்கிறாள் என்பதனை அவனுக்குக் குறிப்பிக்க, அவன் உவவனத்தில் மணிமேகலையைக் கண்டதுமுதல் நிகழ்ந்தவற்றைக் கூறி அவள்பாலுள்ள சிறப்புத் தன்மையைப் பாராட்டினன்; சித்தராபதி அவன் மனத்தை வேறுபடுத்தும் மொழிகள் பலவற்றைக் கூறி முயல அவன் உள்ளம் பிறழ்ந்து தேரேறி உலகவறவியை அடைந்து, பலர்க்கும் உணவளித்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு அருகிற் சென்று, "நீ தாபதக் கோலம் பூண்டது யாது கருதி?" என்று வினாவினன் ; மணிமேகலை "பழம் பிறப்பிற் கணவனாகவிருந்த இவனை வணங்குதல் முறையாகும்" என்று எண்ணி வணங்கி,
 
  "பிறத்தலு மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
 இறத்தலு முடையது இடும்பைக் கொள்கலம்
 மக்கள் யாக்கை யிதுவென வுணர்ந்து
 மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்"
 
என்றுரைத்து, வேற்றுருக்கொள்ள நினைத்து அவனை நீங்கிக் கோயிலினுள்ளே சென்று சம்பாபதியை வணங்கி, முன்பு மணிமேகலா தெய்வம் அருளிச் செய்த மந்திரத்தை யோதிக் காயசண்டிகை வடிவமுற்று அமுதசுரபியை ஏந்தி வெளியே வந்து நின்றாள். அவள் அங்ஙனம் வந்ததை அறியாத உதயகுமரன் "உள்ளே சென்ற மணிமேகலை சம்பாபதி கோயிலினுள்ளே ஒளித்துக்கொண்டாள்" என்று நினைந்து.