பக்கம் எண் :

பக்கம் எண் :238

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை


170
முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த
மதிவாள் முகத்து மணிமே கலைதனை

ஒழியப் போகேன் உன்னடி தொட்டேன்
இதுகுறை யென்றனன் இறைமகன் றானென்.

உரை

1--9.   ஆங்கது கேட்டு ஆங்கு - மணிமேகலை அறத்தோர் கோலம் பூண்டு பிச்சையேற்று அனைவருக்கும் உணவளிப்பதைக் கேட்டு அப்பொழுதே, அரும்புண் அகவயின் - அரிய புண்ணின் உள்ளே, தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு - தீயின்கண் பழுக்கக் காய்தலுற்ற செவ்விய கோலானது சென்று சுட்டாற்போல, கொதித்த உள்ளமொடு - கொதிப்புற்ற உள்ளத்துடன், குரம்பு கொண்டு ஏறி - வரம்பு கடந்து எழுந்து, விதுப்புற் நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கி - நடுக்க மெய்திய மனத்தளாய்ச் சுடு மூச்செறிந்து மயங்கி, தீர்ப்பல் இவ் அறமெனச் சித்திராதிபதிதான் கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்-சித்திராதிபதியானவள் மணிமேகலை கொண்ட இவ்வறத்தினை ஒழித்து விடுவேன் என எண்ணி நாடகக் கணிகையர் அனைவர்க்கும் கூறுவாள் ;

தீ துறு - தீயானது பற்றிய, கோல் சுட்டாங்குத் துன்பத்தாற் கொதித்த உள்ள மென்க. குரம்பு - வரம்பு; கொண்டு - தாண்டியென்னும் பொருட்டு; 1 "குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்" என்பது காண்க. விதுப்பு-விரைவுமாம். மேல் வருவன சித்திராபதி கூற்று.

7--15.   கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி தன் காதலனாகிய கோவலன் கொலையுண்ட பின்னர்க் கொடிய துன்பத்தையடைந்து அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்ததும், நகுதக்கன்றே நல்நெடும் பேரூர் - மிகச் சிறந்த பேரூரின்கண் சிரிக்கத்தக்கதாயிற்று, இது தக்கு என்போர்க்கு எள்ளுவரை ஆயது - இவ்வுரை தகுதியுள்ளதென்று கூறும் அறிஞர்கட்கு இகழுரையாகியது, காதலன் வீயக் கடுந்துயர் எய்தி-கணவனிறக்க மிகுந்த துயரத்தை யடைந்து, போதல் செய்யா உயிரோடு புலந்து - நீங்காத உயிருடன் வெறுப்புக் கொண்டு, நளிஇரும் பொய்கை ஆடுநர்போல - குளிர்ந்த நீரினையுடைய பெரிய குளத்தின்கட் சென்று நீராடுவார் போல, முளி எரி புகூஉம் முதுகுடிப்பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-விளக்க மிக்க தீயிடைக் குளிக்கும் பழங்குடியிற் பிறந்த கற்புடை மகளி ரல்லேம் யாம்;

கோவலன் கொலையுண்டமை கேட்டு மாதவி அறவணவடிகளை யடைந்து துறவு பூண்டதனை, முன்னர் ஊரலருரைத்த காதை
யிற்


1 நாலடி.153.