பக்கம் எண் :

பக்கம் எண் :241

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
 
43--51.   அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்-ஒலிக்கின்ற வண்டுகளுடன் தேனினமும் ஆரவாரிக்கும், தருமணல் ஞெமிரிய திருநாறு ஒரு சிறை - கொண்டுவந்திட்ட மணல் பரந்த முன்றிலையுடைய அழகு தோன்றும் ஒரு பக்கத்தில், பவழத் தூணத்துப் பசும்பொன் செஞ்சுவர்-பவளங்களாற் செய்த தூண்களையும் பசிய பொன்னாலாகிய செவ்விய சுவர்களையும், திகழ்ஒளி நித்திலச் சித்திர விதானத்து - ஒளி விளங்கும் முத்துக்களாகிய மேற்கட்டியையும் உடைய, விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து-விளங்குகின்ற பேரொளி பரவிய பளிங்கு மண்டபத்தில், துளங்கு மான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி - ஒளி அசைகின்ற அரியணையாகிய நறு மலர் இருக்கையில், வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை - வெள்ளிய அலைகள் போல விரிந்த வெண்ணிறமுடைய கவரிகளை, கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச - மகளிர் கொண்டு இரு பக்கமும் வீச, இருந்தோன் திருந்தடி பொருந்தி நின்று ஏத்தி - அமர்ந்திருந்த உதயகுமரனுடைய திருந்திய அடிகளை வணங்கி நின்று ஏத்த ;

ஆர்க்கும் ஒரு சிறை யென்க; ஆர்க்கும் என்றதனால் மணமுடைமை பெறப்பட்டது. மணல் பரந்த முற்றத்தையுடையவென விரித்துரைத்துக் கொள்க ; 1 "தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து" என்பது காண்க. நாறுதல்-தோன்றுதல். முத்தாலாகிய சல்லியையும் தூக்கினையும் உடைய சித்திர விதானம் என்க; 2 "ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து, மாலைத் தாமம் வளையுட னாற்றி" என்றார் இளங்கோவடிகளும். மான்-அரிமான். ஊர்தி-ஏறுதற்கிடமாகவுள்ள ஆதனம் என்னும் பொருள் குறித்து நின்றது. மண்டபத்துப் பள்ளியில் இருந்தோன் என்க. ஏத்தி - ஏத்தவெனத் திரிக்க.
 
52--54. திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் - உதயகுமரன் அழகிய பற்கள் விளங்குமாறு செவ்வையாகச் சிரித்து, மாதவி மணிமேகலையுடன் எய்திய - மாதவி மணிமேகலையுடன் கொண்ட, தாபதக் கோலம் தவறின்றோ என - தவ வேடம் தவறின்றி யுளதோ வென்று கேட்க ;
தாபதக்கோலம்-தவவேடம்; என்றது பிக்குணிக் கோலத்தை.
 
55--63. அரிது பெறு சிறப்பில் குருகு கரு வுயிர்ப்ப - அரிதிற் பெற்ற சிறப்பினால் பறவைகள் ஈனும் வண்ணம், ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி - ஒப்பற்றுயர்ந்த அழகிய கரிய காஞ்சி மரம், பாடல் சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய-பாடல் சான்ற சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ந்த, நாடகம் விரும்ப நன்னலம் கவினி - நாடுகளினிடம் விரும்புமாறு அழகிய நலங்கள் நிறைந்து. காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது-விரும்பப்படும் செவ்வியையுடைய .


1 நெடுநல். 90. 2 சிலப். 3: 111-2.