பக்கம் எண் :

பக்கம் எண் :246

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

   என்றலும் - இளங்கோவுக்குச் செங்கோன்முறைமை அல்லவோ
   என உரைத்தலும்,

நல்லரங்கு- 1 "எழுகோ லகலத் தெண்கோ னீளத், தொருகோலுயரத் துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை, வைத்த விடை நிலம் நாற்கோ லாக, ஏற்ற வாயி லிரண்டுடன் பொலியத், தோற்றிய வரங்கு." நாடக மகளிர்க்கு ஆடல் முதலிய மூன்றினொன்றுங் குறையலாகா தென்பது, 2 "ஆடலும் பாடலு மழகு மென்றிக், கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்" என்பதனா னறிக ; சுரும்பு, கரும்பு, அரும்பு என்பன வலித்தல் பெற்றன. அரும்பு - மொட்டறாமலர். செருக்கயல் - ஒன்றை யொன்று எதிர்ந்து போர் செய்யுங் கயல். கொண்டி மகளிர்-பொருளைக் கொள்ளும் பரத்தையர், கோன்முறை-அரசநீதி என்றுமாம். குமரற்கு:முன்னிலையிற் படர்க்கை. குடியிற் பிறந்தாளல்லள். கொண்டி மகளிருட் பட்டாள். அவளைப் பிணித்து அடக்குதல் கோன்முறை யன்றோ வென்க.

112--118. உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து - உதயகுமரன் மனம் மாறுதலடைந்து, விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி-விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற பெரிய தேரின்மீது ஏறிச் சென்று, ஆயிழை இருந்த அம்பலம் எய்தி - மணிமேகலையிருந்த அம்பலத்தை யடைந்து, காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள் போல - பேய்களின் பசியை நீக்குதற்கு ஓட்டினைக் கையிற் கொண்டு நின்று ஊட்டுகின்ற காடு கிழாளைப் போல, தீப்பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் - கொடிய பசியையுடைய மக்களுக்குச் செழுஞ்சோறளித்துக் கடிஞை ஏந்தி நின்ற மணிமேகலையைக் கண்ட வளவில் ;

கடி - பேய். ஊட்டுநளாகிய செல்வி போல வென்க.

119--127. இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி - வரம்பின்றிப் பெருகிய காமத்தோடு அடங்காதவனாய், உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்து என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி - உடலுடன் என்னுடைய நெஞ்சினுட் புகுந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த வஞ்சக் கள்வியாகிய மணிமேகலை, நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையையுடைய நுண்ணிய தவத்தைத் தாங்கி, ஏற்றூண் விரும்பிய காரணம் என்என - இரந்துண்ணுதலை விரும்பிய காரணம் யாது என்று, தானே தமியள் நின்றோள் முன்னர் - தானே தனியளாய் நின்றோள்முன், யானே கேட்டல் இயல்பு எனச் சென்று - யானே நேரிற் சென்று கேட்பது நன்று எனப் போய், நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன்


1 சிலப். 3 : 101-6. 2 சிலப். 3 : 8-9.