பக்கம் எண் :

பக்கம் எண் :250

::TVU::
18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை

ஈண்டு இமையோர் பாவாய் என்றது போலப் பின்னர் "வானோர் பாவாய்" (25-147) எனச் சிந்தாதேவியை விளித்தலுங் காண்க. பிக்குணியாதலின் கண்ணுக்கு மைதீட்டிற்றில ளென்க. வரிந்த சிலை - கட்டமைந்த வில் ; நாணேற்றிய வில்லுமாம். கோணம் - தோட்டியென்னுங் கருவி ; கவைமுட் கருவி - கவைத்த முள்ளையுடைய பரிக்கோல்: 1 "கோணந் தின்ற வடுவாழ் முகத்த" 2 "கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி" என்பன காண்க.
 
நகை குவிமுட் கருவியும், கண் கோணமும், புருவம் கவைமுட் கருவியுமாகி என நிரனிறையாக்குக. காப்பு என்றது வலைக்கு அடை. கலையாகிய வலையென உருவகம் விரித்துரைக்க. தன் கலைத்திறங்களால் புறம்போகாது தடுத்தாள் என்றபடி. வாயை யாழ் என்றதற்கேற்ப முதுமொழியை இசையென உருவகஞ் செய்க ; யாழோசை போல மெல்லிதின்-விளங்க வாயால் முதுமொழி யெடுத்துக் காட்டி என்றலுமாம் ; யானை யாழிசைக்கு வயமாகுமாதலின் இவ்வாறு கூறினான். 3 "காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு" என்பதனால் யானை யாழுக்கு வயமாத லறிக. முதுமொழி - முதுவோர் மொழி ; நீதிமொழி. உதயகுமரன் தன்னை யானையாகவும், மணிமேகலையின் நகை முதலியவற்றை யானையை அடக்குங் கருவிகளாகவும் உருவகஞ் செய்து, அவளால் தான் பிணிப்புண்டமை கூறினனெனக். சூளுறுவார் அடிதொடுதல் வழக்காதலை 4 "அறவ ரடிதொடினும்" 5 "கோனடி தொட்டேன்" 6 "அடல்வலி யெயினர்நின் அடி தொடு கடனிது" என்பவற்றானு மறிக.

சித்திராபதி அது கேட்டு ஏறி வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலென்று கூத்தியன் மடந்தையர் எல்லார்க்குங் கூறும்; அங்ஙனங் கூறுகின்றவள், வஞ்சினஞ் சாற்றி உயிர்த்துத் தேர்ந்து போகிக் குறுகிப் பொருந்தி நின்று ஏத்த, அவன், ''தவறின்றோ'' என, அவள், ''வேந்தே! நின் கண்ணி வாழ்க; காஞ்சி அம்பலத் தாயது'' என, அது கேட்டு அவட்கு உரைப்போன், ''எய்யா மையலேன்'' என்று சொல்ல, சித்திராபதி சிறுநகை யெய்தி, படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற்கு?'' என்றலும், உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து ஏறி எய்திக் காண்டலும் அடங்கானாகிச் சென்று துணிந்து கேட்ப, அவர் வணங்கி நடுங்கி மயங்கி, ''வேட்டது செய்க'' என்று கூறி நீங்கிப் புக்குத்தொழுது ஏத்தி ஓதிக் காயசண்டிகை வடிவாய் வந்து தோன்ற, தாரோன் புக்கு மரீஇ, ''இது குறை'' என்றனன் என, வினை முடிவு செய்க.

உதயகுமரன் அம்பலம் புக்க காதை முற்றிற்று.


1
மதுரைக். 592. 2 முல்லைப். 35 3 கலி. 226-7. 4 பரி. 1 : 68. 5 கலி. 94; 36. 6 சிலப். 12: சுடரொடு''.