[உதயகுமரன் சம்பாபதியை வணங்கிஇங்ஙனம் வஞ்சினங்கூறுகையில்
அவன் கேட்கும்படி, "நீ எம் பெருமாட்டியின் முன் ஆராய்ந்து பாராமற் சூளுறவு மொழிந்தனை
; அதனால் யாதொரு பயனுமில்லை" என்று ஆங்குள்ள சித்திரங்களுள் ஒன்றைப் பொருந்தியுள்ள
தெய்வங் கூறிற்று. அவ்வுரை கேட்டு அவன் மனங் கலங்கி வருந்தி, "மணிமேகலையை
மறப்பாயென்று முன்னங்கூறிய தெய்வத்தின் மொழியும் வியப்பைத் தருகின்றது ;
தெய்வத்தன்மை யுள்ளதாக இருத்தலின் அவள் ஏந்திய பாத்திரமும் வியப்பைத்
தருகின்றது ; இச் சித்திரம் பேசியதும் வியப்பை விளைக்கின்றது ; இவற்றையெல்லாம்
மணிமேகலையின் செய்தியை அறிந்துகொண்ட பின்பு அறிவோம்" என்று துணிந்து மீண்டு
தன் இருப்பிடத்தை யடைந்தான். மணிமேகலை, "நம் வடிவத்தோடு திரிந்தால் உதயகுமரன்
விட்டு நீங்கான் ; ஆகலின் நாம் காயசண்டிகை வடிவங்கொள்ளுதலே நன்று" என்று
எண்ணி அவ் வடிவுகொண்டு சம்பாபதியின் கோயிலிலிருந்து அமுதசுரபியைக் கையிலேந்திக்
கொண்டு யாங்கணும் சென்று பசித்துவந்த யாவருக்கும் உணவளித்து வருபவள், ஒரு நாள்
அந் நகரத்துள்ள சிறைக்கோட்டத்திற் புகுந்து, அங்கே பசியால் வருந்துவோரை
அருளுடன் பார்த்து இனிய மொழி கூறி உண்பிப்பாளாயினள். அவள் ஒரு பாத்திரத்திலிருந்தே
பலருக்கு உணவளித்தலைக் கண்ட காவலாளர் மிக்க வியப்படைந்து, "இப் பாத்திரத்தின்
மேன்மையையும் இவள் செய்கை யையும் அரசனுக்குத் தெரிவிப்பேம்'' என நினைந்து
சென்று, சீர்த்தி யென்னும் இராசமாதேவியுடன் ஒரு மண்டபத்தில் மிக்க சிறப்புடன்
வீற்றிருக்கும் வேந்தனுடைய செவ்வியை நோக்கிச் சேய்மையில் வணங்கி நின்று,
"மாவண்கிள்ளி ஊழிதோ றூழி ஒளியொடு வாழி" என்று வாழ்த்தி, "யானைத்தீ யென்னும்
நோயால் வருந்தி உடல் மெலிந்து இப் பகுதியிலே திரியும் மடந்தை யொருத்தி
சிறைக்கோட்டத்துள்ளே வந்து நின்னை வாழ்த்திக் கையின்கண் பிச்சைப் பாத்திரம்
ஒன்றே கொண்டு அங்கு வந்து மொய்க்கின்ற யாவருக்கும் உணவு சுரந்தூட்டுகின்றனள்
; இவ் வதிசயத்தைத் தெரிவிக்கவே வந்தோம்" என்றார். அதனைக் கேட்ட அரசன்,
"அம் மங்கையை இங்கே அழைத்து வருக" என்றனன். உடனே காவலாளர் வந்து அதனைத்
தெரிவிக்க, அவள் சென்று அரசனைக் கண்டு வாழ்த்தி நின்றனள். அரசன், "அரிய
தவமுடையாய் ; நீ யார் ? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது ?" என்ன,
அவள், "அரசே ! நெடுங் காலம் வாழ்வாயாக ; யான் விஞ்சை மகள் ; இப் பகுதியிலே
வேற்றுருக் கொண்டு திரிந்தேன் ; இது பிச்சைப் பாத்திரம் ; இதனை அம்பலத்தேயுள்ள
தெய்வமொன்று எனக்கு அருளியது ; இது தெய்வத்தன்மையுடையது ; யானைத்தீ யென்னும்
தீராப் பசிநோயைத் தீர்த்தது;