இருசிறை விரித்தாங் கெழுந்துடன் கொட்பன
ஒருசிறைக் கண்டாங் குண்மகிழ் வெய்தி
மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும்
கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச்
செம்பொற் றட்டில் தீம்பா லேந்திப்
பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும்
அணிமலர்ப் பூம்பொழில் அகவையி னிருந்த
பிணவுக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண்
மடவோர்க் கியற்றிய மாமணி யூசல்
கடுவனூக் குவது கண்டுநகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு
வால்வீச் செறிந்த மராஅங் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றன னாமெனத்
தொடிசேர் செங்கையிற் றொழுதுநின் றேத்தியும்
ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர்
நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்
பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர்
குழலொடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர்
ஆரம் பரிந்த முத்தங் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தந் திமிர்வோர்
குங்கும வருணங் கொங்கையின் இழைப்போர்
அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்
நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்
பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்
ஆங்கவர் தம்மோ டகலிரு வானத்து
வேந்தனிற் சென்று விளையாட் டயர்ந்து
குருந்துந் தளவுந் திருந்துமலர்ச் செருந்தியும்
முருகுவிரி முல்லையுங் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்துநகை செய்து
குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும்
பிறழ்ந்துபாய் மானும் இறும்பகலா வெறியும்
|