|
குறள்
- குறிய வடிவமுடைய வாமனன் ; காசிபனுக்கும் அதிதிக்கும் பிறந்தவன்
; திருமாலின் ஐந்தாவது தோற்றமாயவன் ; இவன் மாபலியிடத்து மூன்றடிமண்
இரந்து பெற்று, புவியையும் வானையும் ஈரடியால் அளந்து, மூன்றாமடியைப்
பலியின் தலையில் வைத்து அவனைப் பாதலத்தில் இருத்தினன் என்பது
வரலாறு. அடக்கிய-அடக்க: செய்யிய வென்னும் வினையெச்சம் ; பெயரெச்சமாக்கோடலுமாம்.
நீரிற் பெய்த-நீருடன் பெய்த; தாரை வார்த்தளித்த என்றபடி.
மாவலி: மாபலியென்பதன் திரிபு. பாண குலத்தரசர்கள் மாவலியின்
வழியினரெனக் கூறப்படுவர். இன்னோர் வாணகப்பாடி முதலிய இடங்களிலிருந்து
அரசுபுரிந்தோராவர். அக் குலத்தரசருளொருவன் மகளென்க.
கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட - கொம்புகளிலுள்ள தும்பிகள்
வேய்ங்குழ லோசையைக் காட்ட, பொங்கர் வண்டினம் நல்லியாழ்செய்ய
- சோலையிலுள்ள வண்டினங்கள் நல்ல யாழினி சையை முரல, வரிக்குயில்
பாட மாமயில் ஆடும் - வரிகளையுடைய குயில்கள் பாட அழகிய மயில்கள்
ஆடுகின்ற, விரைப்பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்-மணம் பொருந்திய
மலர்ப்பந்தரைக் கண்டு மனமகிழ்ச்சி மிக்கும் ;
வரி - கீற்று ; வரிப்பாட்டுமாம். பந்தரில் ஆடுதலைக் கண்டு என
மாறுதலுமாம். ''குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம்
நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பின், மயிலா
டரங்கின்'' (4 : 3-6) என முன்னர் வந்திருத்தல் அறியற் பாலது.
புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு - தன் துணையாகிய பேட்டினைப்
பிரிந்த குளத்தில் வாழும் அன்னப்புள்ளுடன், மடமயிற் பேடையும்
தோகையும் கூடி - மடப்பம் பொருந்திய மயிற்பேடையும் ஆண் மயிலும்
சேர்ந்து, இருசிறை விரித்தாங்கு. எழுந்துடன் கொட்பன-இரண்டு சிறகுகளையும்
விரித்து ஒருங்கே எழுந்து சுழல்வனவற்றை, ஒரு சிறைக் கண்டாங்கு உள்மகிழ்வு
எய்தி - ஆண்டு ஒரு பக்கத்திற் கண்டு மனக் களிப்புற்று, மா மணி
வண்ணனும் தம் முனும் பிஞ்ஞையும் - நீல மணிபோன்ற நிறமுடைய கண்ணனும்
அவன் முன்னவனாகிய பலதேவனும் நப்பின்னையும், ஆடியகுரவை இஃதாமென
நோக்கியும் - துவரா பதியில் எருமன்றத்தே ஆடிய குரவையாகும் இஃது என்று நோக்கி வியந்தும்;
வெண்ணிற முடைமையால் ஆண் அன்னத்திற்குப் பலதேவனும், கருநிறமுடைமையால்
ஆண் மயிலுக்கும் பெண் மயிலுக்கும் முறையே கண்ணனும் நப்பின்னையும்
உவமைகள். குரவை - வினோதக் கூத்து |