பக்கம் எண் :

பக்கம் எண் :262

::TVU::
19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
 
உரை
 










67--70.
















 

71--74.

ஆறினுள் ஒன்று ; காம்மும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக் எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது. கண்ணன் முதலியோர் குரவையாடியதனை,

1"மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே."

என்பதனானறிக.

கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையை - கோங்கம் பூவினுடன் சேர்ந்திருந்த மாங்கனியின் பக்கத்தில் இருந்த பல பொறிகளையுடைய மயிலை, செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்தி-சிவந்த பொற்றட்டில் இனிய பாலை ஏந்திக் கொண்டு, பைங்கிளி ஊட்டும் ஓர் பாவையாம் என்றும் - பசிய கிளியை உண்பிக்கும் ஒரு அழகிய பெண்ணாகும் என்றும்;

கோங்கலர்க்குப் பாலையுடைய பொற்றட்டும், மாங்கனிக்குக் கிளியும், மயிலுக்குப் பெண்ணும் உவமைகள். மாங்கனிக்குக் கிளி வடிவும் வண்ணமும் பற்றி உவமையாகும் ; 2"வண்டளிர் மாஅத்துக், கிளி போல் காய கிளைத்துணர்" என்பதுங் காண்க. மற்றும், மாவடுவிற்குக் கிளி உவமையாதலும், மகடூஉ ஒருத்தி பொன்வள்ளத்திலே பாலையேந்திக் கிளியை உண்பிப்பதுமாகிய கருத்துக்கள் 3"சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சில காட்டி, ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல,...கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின், வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர" என்னுஞ் சான்றோர் செய்யுளில் அமைந்திருத்தல் காண்க.

அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த - அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையில் உள்ளிடத்திருந்த, பிணவுக் குரங்கு ஏற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல் - மதர்த்த நோக்கமுடைய மழை போலும் பெரிய கண்களையுடைய மகளிருக்குச் செய்யப்பட்ட அழகிய மணிகளானாகிய ஊசலில் பெண் குரங்கினை ஏற்றி, கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் - ஆண் குரங்கு ஆட்டுவது கண்டு மகிழ்ச்சி யடைந்தும்;

பிணவுக் குரங்கு - பெண் குரங்கு; 4"பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிணவின் பெயர்க் கொடை" என்னுஞ் சூத்திரத்து, ''ஒன்றிய'' என்றதனால், பிணவு என்பது குரங்குக்கும் கொள்ளப்பட்டது. கடுவன் ஊசலில் பிணவுக் குரங்கை யேற்றி ஊக்குவது கண்டு நகையெய்தியும் என்க.

1 சிலப். 17. 2 அகம். 37. 3 கலி. மருதம். 7. 4தொல். மரபு. 58.