உரை
1--8. அரசன்
ஆணையின் ஆயிழை அருளால் - மணிமேகலையின் அருண்மொழியினையேற்ற மன்னவனது ஆணையினாலே,
நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் - நிரயத் துன்பத்தைத் தரும் கொடிய
சிறை நீக்கப்பெற்ற சாலை, தீப்பிறப் புழந்தோர்-தீக்கதியிற் பிறந்து வருந்தினோர்,
செய்வினைப் பயத்தால்-முன்செய்த நல்வினைப் பயனால், யாப்புடை நற்பிறப்பு
எய்தினர்போல - உறுதியுடைய நற்பிறப்பினை அடைந்தமைபோல, பொருள்புரி நெஞ்சில்
புலவோன் கோயிலும் - வாய்மை நான்கினையும் விரும்பிய உள்ளமுடைய மெய்யறிவினனாகிய
புத்தன் கோயிலும், அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் - அருளை விரும்பும்
மனத்தையுடைய அறவோர் வாழுமிடமும், அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்- மடைப்
பள்ளியும் உணவுண்ணு மிடமுமாகி, கட்டுடைச் செல்வக் காப்புடைத்தாக - உறுதியுள்ள
செல்வக் காவலை யுடையதாக;
சிறை
நீக்கிய - சிறையாந் தன்மையைப் போக்கிய. பொருள் - வாய்மை;
1"பொருள்
சேர் புகழ்" என்பதிற்போல. புரிதல்-விரும்புதல். ஆகி யென ஒரு சொல் விரித்துரைக்க.
செல்வக் காப்பு-இனிய காவல். கோட்டம் காப்புடைத்தாக வென்க.
9--13. ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன்
பணித்ததூஉம்-மணிமேகலை அரசன்முன் சென்றதனையும் அவளுக்கு மாறாத சிறந்த புகழையுடைய
அரசன் கூறியதனையும்,
1
குறள் : 5.
|