சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-சிறைச்சாலையை
அழித்து அருள்புரி உள்ளமுடைய முனிவர் வாழும் அறச்சாலையாக்கிய திறத்தையும்,
கேட்டனன் ஆகி - உதயகுமரன் கேட்டு ;
13--21. அத்
தோட்டு ஆர் குழலியை - மலர்களை யணிந்த கூந்தலையுடைய அம் மணிமேகலையை, மதியோர்
எள்ளினும் மன்னவன் காயினும் - என்னை அறிவுடையோர் இழித்துக் கூறினும் அரசன்
சினப்பினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று-அவள் அம்பலத்தினின்றும்
வெளிப்படும் போதிற் சென்று, பற்றினன் கொண்டு என் பொற்றேர் ஏற்றி -
பிடித்துக் கொண்டு எனது பொற்றேரில் ஏற்றி, கற்றறி விச்சையும் கேட்டு -
அவள் கற்றுத் தெளிந்த வித்தையையும் கேட்டு, அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி
கேட்குவன் என்றே - அவள் கூறும் பேரறிவுடைய முதுமொழியையும் கேட்பேன் என்று,
மதுக்கமழ் தாரோன் மனங்கொண்டு எழுந்து-தேன் கமழும் மாலையையுடைய உதயகுமரன்
உள்ளத்திற்கொண்டு எழுந்து, பலர் பசிகளையப் பாவை தான் ஒதுங்கிய - பலருடைய
பசியையும் நீக்குமாறு மணிமேகலை ஒதுங்கியுள்ள, உலக வறவியின் ஊடு சென்று ஏறலும்
- உலக வறவியினுள்ளே ஏறிச் செல்லலும் ;
தோடார் குழலி, தோட்டார் குழலி யென
விகாரமாயிற்று. தோடு-இதழ்; பூவுக்கு ஆகுபெயர்; தொகுதி யென்றுமாம். பொதியில்-
பொது இல் ; பலருக்கும் பொதுவான இடம் ; அம்பலம். பொதுவில் எனற்பாலது
பொதியில் என மரூஉவாயிற்று. குழலியைப் பற்றனன் கொண்டு என இயைக்க. பற்றினன்
கொண்டு - பற்றிக்கொண்டு.
22--26. மழைசூழ்
குடுமிப் பொதியிற் குன்றத்து - முகில் சூழும் முடியையுடைய பொதியின்மலையின்
மருங்கே, கழைவளர் கான்யாற்று - மூங்கில் வளர்ந்த கானியாற்றின்கண், பழவினைப்
பயத்தால் - முற்செய்த தீவினைப்பயனால், மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் -
விருச்சிகன் காயசண்டிகைக்கு இட்ட சாபத்தினது, ஈராறு ஆண்டு வந்தது - பன்னிரண்டாவது
ஆண்டு வந்தது'' இன்னும் வாராள் காயசண்டிகை எனக் கையறவு எய்தி-காயசண்டிகை இன்னும்
வந்திலள் எனத் துன்பமெய்தி ; கையறவு - செயலறுதியாகிய துன்பம்.
27--32.
காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன் - அவளுடைய கணவனாகிய காஞ்சனன் என்போன்,
ஓங்கிய மூதூர்உள் வந்து இழிந்து - பெருஞ் சிறப்புடைய இத் தொன்னகரின் உள்ளே
வந்திறங்கி, பூத சதுக்கமும் பூமலர்ச் சோலையும்-பூதசதுக்கத்திலும் பொலிவுள்ள
மலர்ச்சோலைகளிலும், மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் - தவத்தோர்
உறையுமிடங்களிலும் மன்றங்களிலும் |