|
அம்பலங்களிலும், தேர்ந்தனன் திரிவோன்-தேடித் திரிகின்றவன், ஏந்திள வனமுலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டாங்கு - மணிமேகலை காயசண்டிகை வடிவத்துடன்
மக்களது பசிப்பிணியைக் களையக் கண்டு ;
பூத சதுக்கம்-கூடா வொழுக்கினர் முதலிய அறுவகையோரையும்
பாசத்தாற் பிணித்துப் புடைத்துண்ணும் பூதம் நிற்கும் சதுக்கம்; சதுக்கம் -
நாற்சாந்தி.
1"தவமறைந்
தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர்
பிறர்மனை நயப்போர். பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள்
பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்குங் கடுங்குர லெடுப்பிப், பூதம் புடைத்துணும்
பூத சதுக்கமும்" எனச் சிலப்பதிகாரத்து வருதல் காண்க. கணவன் வாராள் எனக்
கையற வெய்தித் தோர்ந்தனன் திரிவோன் கண்டு என்க.
33--37. இன்று
நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்-இப்பொழுது
நின் கையில் ஏந்தியுள்ள பாத்திரம் ஒன்றாயிருந்தும் அதன்கணுள்ள உணவினை யுண்போர்
பலராகலின், ஆனைத்தீ நோய் அரும்பசி களைய-யானைத்தீ யென்னும் தீர்த்தற்கரிய
பசிநோயைத் தீர்க்க, வான வாழ்க்கையர் அருளினர் கொல் என - விசும்பில்
வாழும் வானவர் நினக்கு இதனை அளித்தனரோ என்று, பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
- பழைய கேண்மையைப் புலப்படுத்தும் பல கட்டுரைகளைக் கூறிப் பாராட்டவும் ;
அருளினர் கொல் என்றும், கட்டுரை பல கூறியும்
பாராட்ட வென்க.
38--39. விழையா
உள்ளமொடு அவன் பால் நீங்கி - மணிமேகலை விரும்பாத உள்ளத்துடன் அவனிடமிருந்து
நீங்கி, உதயகுமரன் தன்பாற் சென்று - உதயகுமரன் நிற்குமிடத்தை யடைந்து ;
40--70. நரை மூதாட்டி
ஒருத்தியைக் காட்டி-நரை மிக்க முதுமையுடையாள் ஒருத்தியைக் காட்டி, தண் அறல்
வண்ணம் திரிந்து வேறாகி வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய் - குளிர்ந்த கரு
மணல் போன்ற நிறம் திரிந்து வேறுபட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக்
காண்பாய், பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ நரைமையில் திரைதோல் தகையின்று
ஆயது - வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி யிருக்கும் பிறைபோன்ற
நுதலின் இயல்பை நீ காணவில்லையோ, விறல் விற்புருவம் இவையும் காணாய் இறவின்
உணங்கல் போன்று வேறாயின - வெற்றிபொருந்திய விற்படை போன்ற புருவங்களாகிய
இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறு பட்டன
1
சிலப். 5 : 128-34.
|