பக்கம் எண் :

பக்கம் எண் :280

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை
 

அறிவுரைத்த - உலக வறவியின் பக்கலில் வருந்திப் பழமைக் கட்டுரை கூறிய, இவ் வம்பலன் தன்னொடு - இவ் வயலானுடன், இவ் வைகு இருள் ஒழியாள்-இருள் தங்கிய இவ் விரவில் நீங்காள், இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து வந்தறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து - இவளதுசெயலை இருளையுடைய இடையாமத்தில் வந்து அறிவேன் என்று உளத்திற்கொண்டு புறப்பட்டு, வான் தேர்ப்பாகனை மீன் திகழ் கொடியனை கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை - வானிலுலாவும் தென்றலந் தேர்ப்பாகனை மீன் விளங்கும் கொடியுடையானைக் கரும்பாகிய வில்லுடையானை அரும்புகளாகிய அம்புகளை யுடையவனை, உயாவுத் துணையாக வயாவொடும் போகி - வினாவுந் துணையாகக்கொண்டு வேட்கை நோயுடன் சென்று ;

ஆங்கவள் உரைத்த-மணிமேகலையால் அறிவுறுக்கப்பட்ட.அயர்ந்து-மறந்து என்றுமாம். அறிவுரைத்த - பண்டு அறிந்தவர் போலுரைத்த. வம்பலன் - புதியன் ; ஏதிலான். இவனிருத்தலின் இவ் விரவில் புறம் போகாளெனக் கருதினானென்க. வான்தேர் - வானிலுலாவும் தென்றலாகிய தேர். பாகன் கொடியன் வில்லி மைந்தன் என ஒரு பொருள் மேற் பல பெயர்கள் வந்தன. பாகனும் கொடியனும் வில்லியும் மைந்தனுமாகிய காமனை யென்க. அரும்பு, அருப்பென்றாயது. துணையாக்கொண்டு என விரித்துரைக்க.

94-101. ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து-ஊர் முழுவதும் உறங்கும் நள்ளிரவில் தான் மட்டும் தனியாக எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலிபோல, - யானையை விரும்பிப் புறப்படும் கொடிய புலியைப்போல, கோயில் கழிந்து வாயில் நீங்கி - அரண்மனையை நீங்கி வாயிலைக் கடந்து, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-மணிமேகலை இருந்த ஊரம்பலத்தை அடைந்து, வேக வெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல - வேகத்தினையுடைய கொடிய நஞ்சினைக் கொண்ட பாம்பு கிடந்த மிக வுயர்ந்த புற்றின் துவாரத்தில் நுழைகின்றவனைப்போல, ஆகம் தோய்ந்து சாந்து அலர் உறுத்த - மார்பிற் பூசப்பெற்ற சாந்தமானது தனது வரவை ஆண்டுள்ளோருக்கு அறிவுறுத்த, ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்-முறையாக அடியை வைத்து அவ் வம்லபத்தின் உள்ளே புகுதலும் ;

வேகம் - விடவேகம். தீ - நஞ்சு. முன்பு ''புற்றடங் கரவிற் புக் கொளித் தடங்கினன்'' என்றதற்கேற்ப, ஈண்டு ''நாகங்கிடந்த புற்றளை புகுவோன் போல'' என்றார். பின் ''அரவம் பை விரித்தென. எழுந்து'' என்பதும் இதுபற்றியே, போகு - நீண்ட; 1"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள" என்பது காண்க. அலருறுத்த - பலரறியச் செய்ய.


1  தொல். உரி: 19.