பக்கம் எண் :

பக்கம் எண் :281

Manimegalai-Book Content
20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை
 

102--109. ஆங்கு முன் இருந்த அலர்தர் விஞ்சையன்-அங்கே முன்பு மறைந்திருந்த மலர்ந்த மாலையினையுடைய விஞ்சையன், ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே - இவன் இப்பொழுது இவளிடமே வந்திருக்கின்றனன் என்று கருதி, வெஞ்சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப-நெடுஞ்சினமுடைய பாம்பு நஞ்சு பொதி பற்கள் தோன்றுமாறு, தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென - தனது மிக்க சீற்றத்துடன் எழுந்து படத்தை விரித்தாற்போல, இருத்தோன் எழுந்து - காஞ்சனன் எழுந்து, பெரும்பின் சென்று அவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசி - உதயகுமரனது முதுகின் புறமாகச் சென்று அவனுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த அழகிய தோள்கள் துணிபடுமாறு வாளால் எறிந்து, காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்றே அவள்பால் புகுதலும் - காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு விசும்பிடைச் செல்லுவேன் என நினைந்து கரந்துரு வெய்திய மணிமேகலையிடஞ் செல்லுதலும் ;

விஞ்சையன் இருந்தோன் எழுந்தென்க. பெரும்பின் சென்று நெடிது பின் சென்று என்றுமாம்.சுரும்பு அறை மணித்தோள்-மலையையொத்த அழகிய தோள் என்பாருமுளர் ; சுரும்பு-மலை; அறை: உவமவுருபு.

110-115. நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் - நெடிய நிலையாகிய தூணினிடத்தில் விளங்கும் கடவுட் டச்சனாகிய மயனால் எழுதப்பட்ட பாவை அப் பொழுது கூறும், அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன - விஞ்சையனாகிய காஞ்சனனே அணுகாதே அணுகாதே, மணிமேகலை அவள் மறைந்துரு எய்தினள் - அவள் மணிமேகலை காய சண்டிகையின் வடிவத்தைக் கொண்டுள்ளாள், காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி - நின் மனைவி தனது கொடிய பசிநோய் நீங்கப் பெற்று, வானம் போவுழி வந்தது கேளாய் - விசும்பின் வழியே செல்லும்பொழுது நிகழ்ந்த துன்பத்தைக் கேள்;

கடவுள் - தெய்வத் தச்சன் ; 1"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கேன்" எனப் பின் வருதலுங் காண்க. வந்தது - நிகழ்ந்த துன்பம்; வினைப்பெயர்.

116-122. அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் - வானிலே செல்வோர் துர்க்கை எழுந்தருளியுள்ள பெரிய விந்த மலையின் மேலே செல்லார், போவார் உளரெனில் பொங்கிய சினத்தள் - அங்ஙனம் போவார் உளராயின் மூண்டெழுஞ் சீற்றமுடையளாய், சாயையின் வாங்கிக் தன்வயிற்று இடூஉம் - தன் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கும்.


1   மணி. 21: 132 - 3.