[பின்பு, சம்பாபதியின் கோட்டத்திலிருந்த
மணிமேகலை, காஞ்சனன் செய்தியையும் உதயகுமரன் வெட்டுண் டிறந்ததையும் காஞ்சனனுக்குக்
கந்திற்பாவை கூறிய வியத்தகு மொழியையும் அறிந்து எழுந்து ''இவ்வுருக் கெடுவதாக''
என்று தான்கொண்ட வேற்றுருவை யொழித்து. உதயகுமரன் வடிவினை நோக்கி ''முற்பிறப்பிலே
திட்டி விடத்தால் உன் உயிர் போன பொழுதில் நின் பிரிவாற்றாது யானும் தீயிற்
பாய்ந்து உயிர் துறந்தேன்; உவ வனத்திற் கண்டபொழுது உன் பால் மனஞ் சென்றமையின்,
மணிமேகலா தெய்வம் என்னை யெடுத்துச் சென்று மணிப்பல்லவத்தில் வைத்துப் புத்தபீடிகைக்
காட்சியால் என் பழம்பிறப்பை எனக்கறிவித்து உனது முற்பிறப்பையும் கூறிற்று;
அதனால், நீ முன்பு கணவனாக இருந்ததை அறிந்து யான் உன் பால் அன்பு கொண்டு,
"பிறந்தோர் இறத்தலும்
இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு
துன்பமும்
யான்நினக் குரைத்துநின் இடர்வினை
யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் ;"
காதல, வெவ்வினை உருப்ப விஞ்சையன் வெகுளியால் விளிந்தனையோ, என வெய்துயிர்த்துப்
புலம்பி, அவ்வுருவினருகே செல்லலுற்றனள். அப்பொழுது ஆண்டுள்ள கந்திற்பாவைத்
தெய்வம், ''நீ இவன்பாற் செல்லாதே; செல்லாதே; உனக்கு இவன் கணவனாகியதும்
இவனுக்கு நீ மனைவியாகியதும் சென்றபிறப்பில் மட்டும் அல்ல; அதற்கு முன்னும்
எத்தனையோ பிற்றப்புகளில் நிகழ்ந்தன. இங்ஙனம் தடுமாறும் பிறவித் துன்பத்தை
யொழிப்பதற்கு முயல்வோய்! இவன் இறந்ததுபற்றி நீ துன்ப மெய்தாதே'' என்று
தன்தெய்வ வாக்கால் உரைத்தது. அது கேட்ட மணிமேகலை, ''இவ்வம்பலத்தில் யாவருக்கும்
உண்மையை உரைத்துக்கொண்டிருக்கும் தெய்வம் ஒன்றுண்டென்பர்; அத்தெய்வம் நீ
தானோ? நின் திருவடியைத் தொழுகின்றேன்; சென்ற பிறவியில் திட்டிவிடத்தாலும்
இப் பிறிவியில் விஞ்சையன் வாளாலும் இவன் விளிந்ததன் காரணத்தை நீ அறிவையோ?
அறிவையாயின் அதனை எனக்கு உரைத்தருளல் வேண்டும்'' என்றான். என்றலும் அத்தெய்வம்,
"காயங்கரை யென்னும் ஆற்றங்கரையில் இருந்து கொண்டு புத்ததேவனுடைய வருகையைக்
கூறி மன்பதைகளின் மனமாசினைப் போக்கி வரும் பிரம தரும முனிவரை இராகுலனும்
நீயும் வழிபட்டு, அவருக்கு அமுது செய்விக்க விரும்பி அவ ருடன்பாடு பெற்று, விடியற்காலையில்
அமுதமைக்குமாறு மடையனுக்குக் கூறினீர். அவன் எக்காரணத்தாலோ சிறிது பொழுது
தாழ்த்துவந்து அங்ஙனம் வந்த அச்சத்தால் கால் தளர்ந்து மடைக்கலம் சிதையும்படி
வீழ்ந்தான்; வீழ்ந்தனைக் கண்டும் இரங்காமல், ''இவன் முனிவர்க்குச் செய்ய
வேண்டியதனை |