விரைந்து வந்து செய்யாது தாழ்த்தனன்''
என்று சினந்து, அவன் தோளும் தலையும் வேறாகுமாறு இராகுலன் வாளால் அவனைச் துணித்தான்.
அவ்வல்வினையே அப் பிறப்பிலே நஞ்சுவிழி யரவாலும், இப்பிறப்பிலே விஞ்சையன்
வாளாலும் அவன் பொன்றுமாறு செய்தது. வினை தன் பயனை ஊட்டாமலொழியாதென்பது
திண்ணம்" என்றுரைத்து, மற்றும் மணிமேகலை அரசனாற்சிறை வைக்கப்படுதலும், சிறையினின்று
நீங்குதலும். சாவகநாடு சென்று ஆபுத்திரனோடு மணிபல்லவத்தை அடைதலும், வேற்றுருக்கொண்டு
வஞ்சிநகரம் புகுந்து ஆண்டுள்ள பல சமயவாதிகளின் கொள்கைகளையும் கேட்டலும்
ஆகிய பின்னிகழ்ச்சிகளையும் தெரிவித்து, "யான் தெய்வகணங்களைச் சார்ந்த
ஒருவன்; என் பெயர் துவதிகள் என்பது; இந்தப் பழைய தூணில் மயன் எனக்கு ஒப்பாக
அமைத்த இப்படிமத்தைவிட்டு ஒருபொழுதும் நீங்கேன்'' என்று தன் வரலாற்றையும்
கூறியது. அவற்றைக்கேட்ட மணிமேகலை, ''அப்பால் என் இறுதிநாள்காறும் நிகழ்பவைகளை
உரைத்தருள்க'' என வேண்டவே, ''காஞ்சிப் பதியில் மழையின்மையால் உயிர்கள்
பசியால் வருந்துதலையும், மாதவி, சுதமதி என்னும் இருவருடன் அறவணவடிகள் ஆண்டுச்
சென்று நின் வரவினை எதிர்நோக்கி யிருத்தலையும் வஞ்சிநகரிலே நீ அறிந்து,
உடனே அக் கச்சிமாநகரை அடைந்து உணவளித்து எல்லா உயிர்களையும் பாதுகாப்பாய்;
அந்நகரிலே உன்னாற் பற்பல அற்புதங்கள் நிகழும்; பின், வஞ்சிநகரிலே கேட்ட
பல சமயவாதிகளின் கொள்கைகளையும் அறவணவடிகட்குத் தெரிவித்து, அவர் அறிவறுத்த
நல்லறங்கள் பலவற்றையும் வழுவாது செய்து, இறந்து, மேல்வரும் பிறப்புக்களை உத்தர
மகத நாட்டிலேயே பெறுவாய். அவை யாவும் உனக்கு ஆண்பிறப்பாகவே நிகழும்;அப்
பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் நீ அருளறத்தினின்று நீங்காயாகி, முடிவிற் புத்த
தேவனுக்கு முதல் மாணாக்கனாகிய பெரும்பேறெய்திப் பற்றற்று வீடுபெறுவாய்'' என்று
அத்தெய்வம் உரைத்தது; கேட்ட மணிமேகலை கவலை யொழிந்து மயக்கம் நீங்கியிருந்தாள்;
அவ்வளவிலே கதிரவன் தோன்றினான்.]