உரை
1--4. கடவுள்
எழிதிய நெடுநிலைக் கந்தின் - தெய்வத்தன்மையுடைய பாவை எழுதப்பெற்ற நெடிய
நிலையாகிய தூணின், குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் - மேற்றிசைக்கண்
அமைக்கப்பட்ட உயர்நிலை பொருந்திய வாயிலையுடைய, முதியாள் கோட்டத்து
அகவயின் கிடந்த - சம்பாபதி கோயிலினுள்ளே துயின்ற, மது மலர்க் குழலி
மயங்கினள் எழுந்து - மணிமேகலை மயக்கமுற்று எழுந்து ;
இரட்டுற
மொழிதலால் கடவுளால் எழுதப்பட்ட பாவையென்றுங் கொள்க ; கடவுள் - தெய்வத்
தச்சனாகிய மயன். குடவயின் அமைத்த வாயில் என்க: கோட்டமுமாம். அமைந்த
என்பது பாடமாயின் பொருந்திய என்க.
5--10. விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு
உற்றதும்-காஞ்சனன் செய்தியையும் வென்றி வேலையுடைய மன்னவன் மகனுக்கு நேர்ந்த
துன்பத்தையும், மன்றப் பொதியில் கந்துடை நெடுநிலைக் கடவுட்பாவை-மன்றமாகிய
ஊரம்பலத்தில் நெடிய நிலையாகிய தூணின்கட் பொருந்திய தெய்வப்பாவை, அங்கவற்கு
உரைத்த அற்புதக் கிளவியும்-அவ் விஞ்சையனுக்குக் கூறிய வியப்புடைய மொழிகளையும்,
கேட்டனள் எழுந்து கெடுக இவ்வுருவெனத் தோட்டலர்க்குழலி உள்வரி நீங்கி - கேட்டவளாய்
இவ்வடிவம் கெடுக வென்றெழுந்து அவள் தான் கொண்ட மறைந்த வேடத்தினை ஒழிந்து
;
செய்தியும் உற்றதும் அற்புதக் கிளவியும் கேட்டென்றாரேனும்,
அற்புதக் கிளவியும் அதனாற் செய்தியும் உற்றதும் கேட்டென்று கொள்க. இவ்வுருவங்
காரணமாக உதயகுமாரம் வெட்டுண்டமையின் ''கெடுக விவ்வுரு'' என்றாளென்க. தோட்டலர்க்
குழலி ; சுட்டு மாத்திரை. உள் வரி - மறைந்த வுருவம்.
|