பக்கம் எண் :

பக்கம் எண் :311

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை

கந்திலும் கோட்டத்திலுமுள்ள பாவையும் முதியோனையும் வழிபடல் புரிந்தோர் என்க.,

5--10. சா துயர் கேட்டுக் சக்கரவாளத்து மாதவர் எல்லாம்-சக்கர வாளத்துள்ள அருந்தவரனைவரும் மன்னவன் புதல்வ னிறந்த துயரத்தைக் கேட்டு, மணிமேகலைதனை இளங்கொடி அறிவதும் உண்டோ இது என-மணிமேகலையை நோக்கி இளங்கொடியே நீ இச்செயல்பற்றி அறிந்திருக்கின்றனையோ எனவினவ, துளங்காது ஆங்கவள் உற்றதை உரைத்தலும் - மணிமேகலை நடுங்காமல் நிகழ்ந்தவற்றைக் கூறுதலும், ஆங்கவள் தன்னை ஆருயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறிடத்து ஒளித்து - அவளை இறந்து கிடந்த அரசிளம் புதல்வனுடன் ஓரிடத்து ஒளித்துவைத்து ;

தன்பாற் பிழையின்மையின் துளங்காதுரைத்தனள் என்க. வேறிடத்து - வேறு மறைவான இடத்தில்.

11--8. மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து-மிக்க பெருமையுடைய மன்னவன் கோயிலையடைந்து வாயில்காப்போருக்குக் கூறி, கோயின் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு - மாளிகையிலுள்ள வேந்தனுக்கு அண்மையிற் சென்று, உயர்ந்தோங்கு உச்சி உவாமதிபோல-மிகவுயர்ந்த வானின் நடுவேயுள்ள முழுமதியைப் போல, நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய - மிகவுயரிய நினது வெண்கொற்றக்குடை நிலவுலகிற்குத் தண்ணிய நிழலைத் தருக, வேலும் கோலும் அருள்கண் விழிக்க - நீ ஏந்திய வேற்படையும் செங்கோலும் அருள்நோக்க முடையவாக, தீது இன்றி உருள்க நீ ஏந்திய திகிரி - நினது ஆணைச் சக்கரம் இடையூறின்றி இயல்வதாக, நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய வேந்தே - நினக்கு என்று பால்வரை தெய்வத்தான் எல்லையிடப்பட்ட ஆண்டுகளனைத்திலும் மனத்திற்கு இனியவாக வாழ்வாயாக அரசே ;

வாயில் - வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, நிவந்தோங்கு என்பன ஒரு பொருட்பன்மொழிகள். செய, விழிக்க என்பன வியங்கோல்; செயவெனெச்சமாகக் கொண்டு வாழிய வென்பதனோடு முடித்தலுமாம். வேலும் கோலும் அருட்கண் விழிக்க என்றமையால், பகை வேறலும் குடியோம்பலும் அருளால் நிகழ வேண்டுமென்றவாறாயிற்று. ஏந்திய என்பதனை வேல் கோல் என்பவற்றோடு கூட்டுக, மனக்கு ; அத்துச்சாரியை தொக்கது. இனிதாக : பன்மை யொருமை மயக்கம்.

மாதவரெல்லாம் இங்ஙனம் அரசர்க்கு ஓம்படை கூறியபின், அவருளொருவர், உதயகுமரன் கொலையுண்டமை கேட்டு அரசர்க்குச்செற்றம் நிகழாவண்ணம் முன்பு அப் பதியிலே கழிகாமத்தால் தீங்கிழைத்துக் கொலையுண்ட இருவர் வரலாறுகளை அரசர்க்குக் கூறுகின்றார்.