பக்கம் எண் :

பக்கம் எண் :312

Manimegalai-Book Content
சிறைசெய் காதை
 

19--24.இன்றே அல்ல - இன்றுமட்டுமல்ல; இப் பதி மருங்கில் - இந் நகரத்தின்கண், கன்றிய காமக்கள்ளாட்டு அயர்ந்து - அடிப் பட்டகாமமாகிய கள்ளுண்டலைச் செய்து, பத்தினிப்பெண்டிர்பால் சென்று அணுகியும் - கற்புடைய மகளிரிடம் அவரை விரும்பிப் போய் நெருங்கியும், நற்றவப்பெண்டிர் பின் உளம் போக்கியும் - நல்ல தவஞ்செய்யும் மகளிரின் பின்னர் உளத்தைச்செலுத்தியும். தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்-ஊழ்வினை சினந்துவந்தூட்ட உயிர்துறந்தோர், பாராள் வேந்தே பண்டும் பலரால் - மண்ணுலகாளும் மன்னவர் ஏறே முன்னரும் பலர் இருந்திருக்கின்றனர் ;

கன்றிய - அடிப்பட்ட; முதிர்ந்த. நற்றவம் - வீடுபெறுதற்குச் செய்யுந் தவமுமாம்; 1"நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்" என்பது காண்க. இன்றேயல்ல பண்டும் பலரால் என்க.

25--32. மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் - அரசர் குலத்தைப் பொன்றக்கெடுத்த பரசுராமன்முன், தோன்றல் தகாது ஒழி நீ என - நீ வெளிப்படுதல் தகாது இந் நகரை விட்டு நீங்குவாயாக என்று, கன்னி ஏவலில் - சம்பாபதி ஆணையிட்டமையால், காந்த மன்னவன் - காந்தன் என்ற அரசன், இந்நகர் காப்போர் யார் என நினைஇ-தான் நீங்கின். இந் நகரைப் காப்போர் யாவர் என நினைத்து, நாவலந் தண் பொழில் நண்ணார் நடுக்குற - சம்புத்தீவிலுள்ள பகைவர்கள் நடுக்கமடையுமாறு, காவற் கணிகை தனக்கு ஆம் காதலன் - காவற்கணிகையிடத்து தோன்றிய புதல்வனும், இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்- பகைவர் வெகுண்டு எதிர்ப்பினும் அவர்க்கு வலி குறைதல் இல்லதவனும் ஆகிய, ககந்தன் ஆம் என-ககந்தன் என்பவனே காத்தற்குப் பொருந்தியவனாவான் என்று, காதலின் கூஉய் - அவனை அன்பொடும் அழைத்து;

மருங்கு-குலம்; 2"சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி" என்பதன் உரை காண்க. மழுவாள் நெடியோன்-பரசுராமன்; திருமாலின் தோற்றமாகலின் ''நெடியோன்'' எனப்பட்டான் : மழுவாள்-மழுவாகிய வாள்; சிவன்பால் தவஞ்செய்து பெற்ற பரசு. இவன் தன்னாற் கொலையுண்ட கார்த்தவீரியன் என்னும் அரசனுடைய புதல்வர்கள் தான் இல்லாதபொழுதில் தன் தந்தையாகிய சமதக்கினி முனிவரைக் கொன்றமைபற்றி எழுந்த செற்றத்தால் இருபத்தொரு தலைமுறைகாறும் அரசர்குலத்தை அழித்தலை நோன்பாகக் கொண்டனனென்பது வரலாறு. நெடியோன்றன் முன் தோன்றல் தகாது என்றமையின் அவன் ஈண்டுப் போந்தமை பெற்றாம். ''ஒளி'' என்பது பாடமாயின் மறைந்து கொள் என்பது பொருளாகும். கன்னி-துர்க்கையுமாம். நடுக்குறத் தோன்றிய காதலன் என்க. காவற் கணிகை-அரங்காடுங் கூத்தி, அரசனுடைய


1 சீவக : 77.         2 முருகு : 275.