காமக்கிழத்தி. இகழ்ந்தோர்-அவமதித்த பகைவர்-எஞ்சுதலில்லோன்-வலிகுறையாதவன்;
தோலாதவன். என-என்றுநினைந்து.
33--9. அரசாள்
உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும உரிமை நின்னிடம் இல்லாமையால்,
பரசுராமன் நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு
வாரான், அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்குகிளவியின் யான் தோன்று
அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை
அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக என வுரைத்து, காகந்தி
என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின் காகந்தி
என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன்
பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில் ;
கணிகை
மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர் நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய
சொல். ககந்தன் : அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க ''என்று கூறி''
என வருவித்துரைக்க. உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது
கரகத்திலுள்ள காவிரிநீரைப் பெற்றனனென்பது பதிகத்தால்1
அறியப்படும்.
40--4. தெள்ளுநீர்க்
காவிரி ஆடினள் வரூஉம்-தெளிந்தநீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற, பார்ப்பனி
மருதியைப் பாங்கோர், இன்மையின் - பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்திலுள்ளோர்
ஒருவரும் இல்லாமையால், யாப்பறை என்றே எண்ணினன் ஆகி - உறுதியற்றவள் என
நினைந்தவனாய், காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீ வா என்ன - காவிரியின்
கரையில் ககந்தனுடைய புதல்வன் நீ வா என அழைக்க, நேரிழை கலங்கி - அவள்
கலக்கமுற்று ;
காவிரி வாயில் - சங்கமுகத் துறையுமாம். பாங்கோரின்மையின்
நீ வா என்ன என்றியையும்.
45--9. மண்திணி
ஞாலத்து - அணுச்செறிந்த நிலவுலகத்தில், மழைவளம் தரூஉம் பெண்டிராயின்-வேண்டுங்கால்
மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிராயின், பிறர் நெஞ்சு புகாஅர் - ஏதிலார்
உள்ளத்திற் புகுதலிலர், புக்கேன் பிறன் உளம்-யானோ அயலான் உள்ளத்திற்
புகுந்தேன், புரிநூல் மார்பன் முத்தீப்பேணும் முறை எனக்கு இல் என - ஆகலின்
முந்நூலணிந்த மார்பினையுடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை
என்று மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாள் - மிகப் பெரிய துன்பத்துடன் தன்
மனையின்கண் செல்லாளாய் ;
1
மணி. பதிகம் : 10-12.
|