பக்கம் எண் :

பக்கம் எண் :314

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை

மழைவளம் - மழையாகிய வளம் ; வளம் - வருவாய். புக்கேன் ஆகலின் என விரித்துரைக்க. புரிநூன் மார்பன் - கணவன். முத்தீ - காருகபத்தியம் ஆகவனீயம் தென்றிசையங்கி என்பன. பேணுதல் - கணவற்குத் துணையாயிருந்து அதனை வளர்த்தல்.

50--6. பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூத சதுக்கத்தை யடைந்து வருந்தி, கொண்டோன் பிழைத்த குற்றம்தான் இலேன் - கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் - அயலானுடைய உள்ளத்தில் எளிதல் ஒளித்தேன், வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் - மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்திற் பொருந்தினேன், யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் - நான் செய்த குற்றம் ஒன்றையும் யானறியேன், பொய்யினைகொல்லோ பூதசதுக்கத்துத் தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும் - அல்லவை செய்தோரைப் புடைத்துண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கதுக் கடவுளாய நீ பொய்ம்மையை யுடையாயோ என மருதி பலவாறு புலம்புதலும் ;

பூத சதுக்கம் - பூதம் நிற்றலையுடைய சதுக்கம் ; சதுக்கம் - நாற்சந்தி. கொண்டோற் பிழைத்தல் - கற்பிற்கு மாறாக ஒழுகுதல் கற்பின் மனையறம் - கற்புடை மகளிர் புரியும் மனையறம். குற்றந்தான் இலேன், மனையறம் பட்டேன், யானறிகில்லேன்: அங்ஙனமாகவும் கரப்பெளிதாயினேன்; ஆகலின் பொய்யினை கொல்லோ? என்றாள் என்க; பிறனுளம்புக்க தன்னைப் புடைத்துண்ணாமையால் ''பொய்யின் கொல்லோ'' என்றாள். சதுக்கப் பூதத்தின் இயல்பு 1"தவமறைந் தொழுகும்... பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும்" என்பதனால் அறியப்படும். மனையறம்பட்டேன் என்பதற்கு ''இல்லறத்திற்குத் துணையாக நிற்றலை யொழிந்தேன்'' என்று பொருள் கூறினர் டாக்டர் வே. சாமிநாதையர்.

57--8. மாபெரும் பூதம் தோன்றி - மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடி நீ கேள் என்றே நேரிழைக்கும் உரைக்கும் - மடக்கொடியே நீ கேட்பாயாக என்று அவட்குக் கூறும்

59--69. தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற-பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று சொல்லப் பெருமழை பெய்யும்எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் - தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய், பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு-பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பி-


1 சிலப். 5; 128 - 34.