|
மலர்ந்த பூக்களையணியும் கூந்தலையுடைய விசாகையை அன்றி, பெண்டிரைப் பேணேன்-வேறு
மகளிரை விரும்பேன், இப்பிறப்பு ஒழிகென - இப்பிறப்பு இவ்வாறே நீங்குவதாகவென்று,
கொண்டே விரதம் தன்னுட் கூறி-மேற்கொண்ட விரதத்தைத் தன்னுள்ளே கூறிக்கொண்டு;
தருமதத்தனும்
: உம்மை இறந்தது தழீஇ எச்சம். விரிதரு பூங்குழல் - அடர்ந்த பொலிவுள்ள கூந்தல்
என்றுமாம்.
111-4. வாணிக மரபின் வருபொருள் ஈட்டி - முறைமையாற்செய்யும் வாணிகத்தால் வளரும் பொருளைத்
தொகுத்து, நீள் நிதிச் செல்வனாய்-பெருநிதி படைத்த செல்வனாய், நீள்நீல
வேந்தனின் - பெரிய நிலத்தினை ஆளும் அரசனால், எட்டிப்பூப்பெற்று - எட்டியென்னும்
பட்டமும் அதற்குரிய பொற்பூவும் பெற்று, இரு முப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து
உயர்ந்தோன் ஆயினன் - நீங்காத செல்வத்தில் மேம்பட்டவனாய் அறுபதாம் ஆண்டினை
எய்தினன்.
முறைமையால் வாணிகஞ் செய்தலாவது பிறர்
பொருளையும் தம் பொருளை யொத்த மதித்து மிகையாகக் கொள்ளாதும் குறையாகக்
கொடாதும் செய்தலாம்; அங்ஙனஞ்செய்வார்க்கு அந் நல்வாணிகத்தால் மேன்மேற்
பொருள் வளருமாகலின் ''வாணிக மரபின் வருபொருளீட்டி'' என்றார். வருபொருள்-வளரும்
பொருள். அவ்வாறு பெரும் பொரு ளீட்டிய வாணிக வாகையுடையார்க்கு அரசன் எட்டிப்
பூ அளிப்பனென்க.
115-22. அந்தணாளன்
ஒருவன் சென்று - அப்பொழுது மறையவனொருவன் அவன்பாற் சென்று, ஈங்கு என்செய்தனையோ
இரு நிதிச் செல்வ, பெருநிதிச் செல்வனே நீ என் செய்தனை, பத்தினி இல்லோர்
பலறம் செய்யினும் - மனைவி யில்லதோர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும்,
புத்தேள் உலகம் புகா அர் என்பது- வானவருலகிற் செல்லுதற் குரியராகார் என்பதனை,
கேட்டும் அறிதியோ - கேட்டறிதலும் உடையையோ, கேட்டனையாயின் - அங்ஙனம்
கேட்டறிந்தனையானால், நீட்டித்து இராது நின் நகர் அடைக என-இங்கே நெடிது தங்கியிராமல்
நின் நகரத்தை அடைவாயாக என்று கூற, தக்கண மதுரை தான் வறிதாக இப்பதிப் புகுந்தனன்-தருமதத்தன்
தென்மதுரை வறிதாகுமாறு இப்பதியை அடைந்தனன்;
நீட்டித் திராது நின்னகர் அடைக என்றது,
விரைவில் நின்பதியை அடைந்து மணஞ்செய்து மனைவியுடன் இல்லறம் நிகழ்த்துக
என்னும் குறிப்பிற்று. மதுரை வறிதாக என்றதனால் அவனது செல்வ மிகுதி குறிக்கப்பட்டது.
122-4. இருநில வேந்தே - புலியை ஆளும் அரசே, மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டு தருமதத்தன்
இப்பகுதிக்கு வந்தது கேட்டு,
|