பக்கம் எண் :

பக்கம் எண் :320

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை
 

வியலாது, மிக்க அறமே விழுத்துணையாவது - எவற்றினும் மேம் பட்ட அறமேசிறந்த துணையாகுவது, தானம் செய் என-ஆதலின் அறம்புரிவாய் என்று கூற, தருமதத்தனும் மாமன்மகள்பால் வான் பொருள்காட்டி - தருமதத்தன் விசாகையிடம் தனது சிறந்த நிதி களைக் காட்டி, ஆங்கவன் அவளுடன் செய்த நல்லறம்-அவன் அவளுடன் சேர்ந்து செய்த நல்லறங்கள், ஓங்கிரு வானத்து மீனினும் பலவால்-மிகப்பெரிய விசும்பின்கணுள்ள மீனினும் பலவாகும் ;

நில்லாது எனபன, ஈறு தொக்கன. ''யாக்கையு நிலையா'' எனபதும் பாடம். புதல்வருந்த தாரார் என்னும் உம்மை பத்தினியுந் தாராள் என்பதுபடநிற்றலின் எச்சவும்மை; இதுவும், மிக்க அறமே விழுத் துணையாவது என்பது "பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும், புத்தே ளுலகம் புகா அர்" என்பதற்கு மறுப்பாகும். தருமதத்தனாகிய அவனும் என்க.

143--54. குமரிமூத்த அக்கொடுங்குழை நல்லாள்-மணமின்றிக் கன்னியாகவே மூப்புற்ற அவ்விசாகையானவள், அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் படுபழிநீங்கி-உலக அறவியிற் கந்திற்பாவையிலுள்ள துவதிகனென்னும் தேவன் அருளினாலே ஊரிலுள்ளோர் கூறிய அலரினின்றும் நீங்கி, பல்லோர்நாப்பண்-பலர் நடுவண், கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்-கொடிகள் செறிந்த வீதியின் வருகின்றவள் கூந்தல்மேல், மருதி பொருட்டால் மடிந்தோன்தம்முன் - முன்னர் மருதியின்பொருட்டு இறந் தோனின் முன்னவனாகிய ஒருவன், கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள-காமம் வயிரங்கொள்ள இருண்ட உள்ளமுடையவனாய், சுரியிரும்பித்தை சூழ்ந்து புறந்தாழ்ந்த-தனது சுரிந்த கரிய குடுமியைச் சுற்றிப் புறத்தே தாழ்ந்த, விரி பூ மாலை விரும்பினன் வாங்கி-விரிந்த மலர்மாலையை விருப்பத்துடன் எடுத்து, தொல்லோர் கூறிய மணம் ஈது ஆமென - இது பண்டையோர் உரைத்த மணம் ஆகும் என்று, எல் அவிழ் தாரோன் - விளக்க மிக்க மாலையை யணிந்த அவன், இடுவான் வேண்டி - அவட்கு இட விரும்பி, மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினைத் தலையி லேற்ற, ஏறிய செங்கை நீலக்குறிஞ்சி நீங்காது ஆகலின்-அங்ஙனம் ஏறிய கையானது கருநிறம் வாய்ந்த குடுமியினின்றும் நீங்கவில்லை யாகலின் ;

குமரிமூத்தல்-மணமின்றித் தமியளாய் மூத்தல். படுபழி-மைத்துனன் முறையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனளென்று ஊர் கூறிய பொய்ப்பழி. விசாகையின் வரலாற்றைக் கூறிமுடித்தவர் முன்புதெய் வத்தினருளாற் பழிநீங்கி அவள் வீதியில் வருங்கால் நிகழ்ந்ததனைஈண் டெடுத்துக் கூறுகின்றனரென்க. மடிந்தோன் - ககந்தன் சிறுவன். மாலையை விரும்பினன் வாங்கி இடுவான் வேண்டி யென்க. மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினை ஏற்ற என வருவித்துரைக்க.